தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருள் கிளவி (ஊழ் - அதிகாரம்). 563. ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம் என்பன ஒரு பொருள் கிளவி. 561. தக்காங்கு, ஒத்தாங்கு என்பன ஒரு சொல். 951. இல், குடி, குலம் என்பன ஒரு பொருள். 1112. மையாத்தல்: ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக்கோடல்: இறுமாத்தல், செம்மாத்தல் என்பன போல ஒரு சொல். பரிமேலழகர் சொற்களை, செஞ்சொல், இலக்கணச்சொல், குறிப்புச்சொல் என்ற மூன்று வகையாகக் குறிப்பிடுகின்றார் (குறள்: 711). ‘கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய்’ (643) என்னும் குறள் உரையில், “(கேட்டாரைப் பிணிக்கும்) குணங்களாவன: வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன் தருதல் என்று இவை முதலாயின. அவற்றை அவாவுதலாவது சொல்லுவான் குறித்தனவே அன்றி வேறு நுண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின் மேலும் நோக்குடைத்தாதல்” என்று எழுதுகின்றார். சொல்லும் பொருளும் பலசொற்களுக்குத் தெளிவாகப் பொருள் கூறி, பரிமேலழகர் தாம் ஓர் அகராதிக் கலைஞர் என்பதை வலியுறுத்துகின்றார். சில சொற்களுக்கு அவர் தரும் பொருள் கீழே தரப்படுகின்றன. 28. நிறைமொழி - அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தேவிடும் மொழி. 43. பிதிரர் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின் தென்புலத்தார் என்றார். 238. எச்சம் (இசை என்னும் எச்சம்): என்றார், செய்தவர் இறந்துபோகத் தான் இறவாது நிற்றலின். 386. முறை வேண்டினார் - வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார் - வறுமையுற்று இரந்தார். 395. ஏக்கறுதல் - ஆசையால் தாழ்தல். 698. ஒளி (மன்னர்) - உறங்கா நிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள் தன்மை. |