971. ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதல் உடைமை. 765. ஆற்றல் - மனவலி 768. பாடு - கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை. 1023. (மடி) தற்றுதல் - இறுக உடுத்தல். 1063. வன்பாடு - முருட்டுத் தன்மை; அஃதாவது ஓராது செய்து நிற்றல். 1095. சிறக்கணித்தல் - (சிறங்கணித்தல்) சுருங்குதல். 1133. நாண் - இழிவாயின செய்தற்கண் விலக்குவது. ஆண்மை - ஒன்றற்கும் தளராது நிற்றல். உரைக்கு உரை பரிமேலழகர் உரை திட்ப நுட்பம் வாய்ந்து, கருத்துச் செறிவு உள்ளதாய், பலமுறை கற்றுத் தெளிந்தவரிடம் முறையாகப் பாடம் கேட்டறிய வேண்டியதாய் இருக்கின்றது. ஆதலின் அவ்வுரையை எல்லோரும் கற்றுப் பயனடைய வேண்டும் என்று விரும்பியவர்கள் உரைக்கு உரை கண்டனர்; தெளிபொருளும் விளக்கவுரையும் எழுதினர்; குறிப்புரை வரைந்தனர். பதினேழாம் நூற்றாண்டில் ஆழ்வார்த் திருநகரியில் புலமைச் செல்வராய் விளங்கிய திருமேனி இரத்தின கவிராயர் பரிலேழகர் உரைக்கு உரையாக ‘நுண் பொருள் மாலை’ என்ற பெயருடன் விளக்கம் ஒன்று எழுதினார். நுண்பொருள் மாலை செந்தமிழ் இதழில் வெளிவந்தது (செந்தமிழ்த் தொகுதி 6 முதல் 10 வரை) நுண்பொருள்மாலை, இரத்தினகவிராயரின் இலக்கணப் புலமைக்குச் சான்றாய் - ஆராய்ச்சித் திறனுக்கு எடுத்துக்காட்டாய் - விளங்குகின்றது. திருக்கோவையார் உரையை ஆங்காங்கே மேற்கோளகப் பெற்றுள்ளது. 1869-ஆம் ஆண்டில், ஏட்டுச் சுவடிகளில் இருந்த பரிமேலழகர் உரைக்குப் பலவகையான விளக்கக் குறிப்புக்கள் எழுதி, திருவள்ளுவமாலைக்கு உரை எழுதிச் சேர்த்து விருத்தியுரை என்ற பெயருடன் சரவணப் பெருமாள் ஐயர் வெளியிட்டார். இவ்வுரை பரிமேலழகர் உரையின் அருமை பெருமைகளை எல்லாம் நன்கு விளக்குவதாய் அமைந்தது. இவ்வுரையைப் பின்பற்றிப் பலர், பரிமேலழகர் உரைக்கு விளக்கம் எழுதி வெளியிட்டனர். 1885-ஆம் ஆண்டு பரிமேலழகர் உரையை இலக்கண உரை என்ற பெயருடன், விளக்கவுரை எழுதிச் சேர்த்து, முருகேச முதலியார் வெளியிட்டார். |