பக்கம் எண் :

407ஆய்வு

     இராமாநுசக் கவிராயர் வை.மு. சடகோப ராமாநுசாச்சாரியார், கோ.
வடிவேல் செட்டியார் (1919) ஆகியோர் குறிப்புரைகளுடன் பரிமேலழகர்
உரையை வெளியிட்டுள்ளனர்.

     சோழவந்தான் அரசன் சண்முகனார் செந்தமிழில் (செந்தமிழ் -
தொகுதி 6; பக்கம் 207) திருக்குறள் ஆராய்ச்சி என்ற பெயருடன்
பரிமேலழகர் உரையை விளக்கி எழுதியுள்ளார். “பரிமேலழகர் உரையைக்
காண்டிகையாகக் கொண்டு விருத்தி எழுதப்படும்” என்றும், “பரிமேலழகர்
உரையே சிறப்புடைத்தாகலின், அதனைக் காண்டிகையாகக் கொண்டு
அவ்வுரையுள் பொருந்தாமை மறுத்து, ஏனையவற்றோடு விரிப்பன
விரித்து இவ்வுரை எழுதப்படும்” என்றும் முகவுரையில் கூறி, திருவள்ளுவ
மாலையைத் திருக்குறளின் சிறப்புப் பாயிரமாகக் கொண்டு, பால், இயல்,
அதிகாரம்’ ஆகியவற்றின் அமைப்பை ஆராய்ந்து செல்லுகின்றார்.

     1946-ஆம் ஆண்டில், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் சிறந்த
ஆராய்ச்சி முன்னுரை ஒன்றை விரிவாக எழுதி, பலவகையான நோக்குடன்
அடிக்குறிப்புகளை எல்லோருக்கும் பயன்படும் வகையில் வெளியிட்டார்.

     உரைக்கு உரைகள் பலவற்றைக் கண்ட உரை, பரிமேலழகர் உரை
ஒன்றேயாகும்.

உரையின் செல்வாக்கு

    பரிமேலழகர் உரையை ஆழ்ந்து பயின்று, தாம் இயற்றிய உரைகளிலும்
நூல்களிலும் பரிமேலழகர் கருத்துக்களைச் சிவஞான முனிவரும்
சிவப்பிரகாசரும் எடுத்தாண்டுள்ளனர். பரிமேலழகர் உரை செல்வாக்கு
மிக்கது என்பதற்குச் சான்றாய் அவை அமைகின்றன.

1

    சிவஞானமுனிவர், தாமியற்றிய சிவஞானபோத மாபாடியத்தில், ‘அவன்
அவள் அது எனும்’ முதற் சூத்திரவுரையில், “காணப்பட்ட உலகாற்
காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், தோற்றிய திதியே
எனவும், ஒடுங்கியுள்ளதாம் எனவும் உலகின்மேல் வைத்துக் கூறினார்”
என்று கூறுகின்றார். இங்கே பரிமேலழகர் ‘அகர முதல’ என்னும் முதற்குறள்
உரை விளக்கத்தில் எழுதும் சில சொற்கள் எவ்வித மாறுதலும் இன்றி இடம்
பெற்றுள்ளன. பரிமேலழகர், “காணப்பட்ட உலகாற் காணப்படாத கடவுட்கு
உண்மை