இல்லைஎன்றல் கேட்பவும் இன்னாது என்று இரப்போர் நிலை கண்டு ஆங்கு எப்பொருளும் நேர்வோன் என்று கூறுகின்றார். ‘அதனை (இளிவரவை)ப் பின்னும் பிறன் ஒருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல்’ என்பது இரண்டாவது கருத்து. சிவப்பிரகாசர் அவ் வள்ளலைச் சிறப்பித்துப் பாடும் வேறொரு பாடலில், வந்துதன் சீர்பாடுநரை, மண்மீதில் அந்நிலையே இந்திரன்தான் ஆக்கும் இயல்பினான் என்று பாடி, இரண்டாவது கருத்தை மேற்கொண்டுள்ளார். யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் எனக் கரப்பார் சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் - என்பது மூன்றாவது கருத்து. இக்கருத்தைச் சிவப்பிரகாசர், தம் ஞானக்குரவர்மீது பாடிய கலம்பகத்தில், வலந்திரி கதிர்காண் உலகினர் எல்லாம் வந்து கேட்பன இலை எனாத நலம் தரும் ஒருநீ என்றும், பிரபுலிங்கலீலையில், இல்லை எனல் இல்லைஎனா எங்கள் குரு வசவேசன் என்றும் எடுத்தாண்டுள்ளார். 3 ‘நாண் என்னும் நல்லாள்’ என்னும் குறளுரையில் பரிமேலழகர், “நாண் என்பதனை நல்லாள் எனப் பெண்பாலாக்கியது, வடமொழி முறைமை பற்றி” என்று கூறுகின்றார். இக்கருத்தை, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சீகாழிக் கோவையில் - வழிபாடு மறுத்தல் என்னும் துறையில் - ‘விண்ணியல் மாமதி’ என்று தொடங்கும் செய்யுளில், பெண்ணியல் என்று வடநூலின் நாமம்பெறும் இலச்சை கண்ணியலாம் எனக்கு அஃது ஒழிய இன்று காத்தருளே என்று அமைத்துள்ளார். |