ஏலாமையால், குறிப்புரையில் மனத்தால் துறத்தல் என்று இருக்க வேண்டும் என்று காட்டியுள்ளேன்”. இதன் பொருத்தத்தை அறிஞர் பெருமக்கள் மேலும் ஆராய்தல் வேண்டும். 3 துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று (1306) என்ற குறளுக்குப் பரிமேலழகர் எழுதும் சிறப்புரையில், “மிக முதிர்ந்து இறும் எல்லைத்தாய கனி, நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்யாது ஆதலின்” என்ற பாடம் இன்றுள்ள பதிப்புக்களில் காணப்படுகின்றது. ஏட்டுச் சுவடிகள் பலவற்றில் ‘மிகவும் இனிமை செய்தலின்’ என்ற பாடமே காணப்பட்டது என்றும், தமக்குக் கிடைத்த ஒரு பிரதியில் மட்டும் ‘செய்யாது ஆகலின்’ என்ற பாடம் காணப்பட்டது என்றும், அப் பாடமே பொருளமைதிக்கு ஏற்றதாக இருந்ததால் அதனையே முதன்மையாகக் கொண்டு பதிப்பித்ததாகவும் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார், பரிமேலழகர் உரை விளக்கத்தின் (1946) முகவுரையில் குறிப்பிடுகின்றார். இவருக்குமுன், பரிமேலழகர் உரைக்குத் ‘தெளிபொருள் விளக்கம்’ எழுதி வெளியிட்ட (1919) கோ. வடிவேல் செட்டியார் இருவேறு பாடங்களின் பொருத்தத்தை ஆராய்ந்து அடிக்குறிப்பாகச் சேர்த்துள்ளார். அது பின் வருமாறு: “மிகவும் இனிமை செய்தலின் என்றும் பாடமுண்டு. அது பிறழ்ந்த பாடமாம். பின் கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித்து அன்று ஆகலின் என்று எதிர்மறையாகக் கூறியிருத்தலின் முன் மிகவும் இனிமை செய்தலின் என்று உடம்பாடாகக் கூறல் பொருந்துவதன்று. பதனழிந்த பழம் உண்பார்க்கு மிகவும் இனிமை செய்யாமைபோலத் துனியிலாக் காமம் அனுபவிப்பார்க்கும் மிகவும் இனிமை செய்யாது; இளங்காய் உண்பதற்குத் தகுதியாகாமை போலப் புலவியில்லாக் காமம் அநுபவிப்பதற்குத் தகுதியுடைதாகாது என்று இங்கு உணர்தற்பாற்றாம்”. ‘காமத்துப்பால் உரைவேற்றுமை’ (1964) என்னும் நூலின் முன்னுரையில் (பக்கம் 3, 4) இருவேறு பாடங்களையும் ஆராய்ந்த பேராசிரியர் லெ.ப. கரு. இராமநாதன் செட்டியார் நம்மை இத் துறையில் மேலும் ஆராயத்தூண்டுகின்றார். அவர் கருத்து பின்வருமாறு: |