பக்கம் எண் :

413ஆய்வு

     “இவ்வுரையில் (‘துனியும் புலவியும்’ என்ற குறளுக்குப் பரிமேலழகர்
எழுதும் உரையில்), துனி இல்லையாயின் கனியற்று என்றமையால் துனி
விலக்கத் தக்கது என்பதும், புலவி இல்லையாயின் கருக்காய் அற்று
என்றமையால் புலவி வேண்டத்தகுவது என்பதும் பெறப்பட்டன. எனவே
துனியின்மையும் புலவியும் வேண்டும் என்பது இதன் கருத்தாகும். இதற்கு,
துனியும் புலவியும் ஆகிய இவ்விரண்டும் வேண்டும் என்பதே பரிமேலழகர்
கருத்து எனக்கொண்டு விளக்கம் கூறுதல் பொருந்துமா என்பது ஆராய்தற்கு
உரியது.

     “மேற் குறிப்பிட்ட பரிமேலழகர் உரைப் பகுதியில் கனி நுகர்வார்க்கு
மிகவும் இனிமை செய்தலின் என்றே பழைய பதிப்புக்களில் காணப்படுகிறது.
பின்னர் வெளிவந்த பதிப்புக்களில், கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை
செய்யாது ஆகலின் என மாறுபாடாக உள்ளது. உரையில் நேர்ந்த
இவ்வேறுபாடு மேற்குறிப்பிட்ட கருத்து வேறுபாட்டிற்குக் காரணமாயிற்று”.

4

    காமத்துப்பாலில் ‘பதிமருண்டு பைதல் உழக்கும்’ என்ற குறளின் (1229)
உரையில் பரிமேலழகர் பிறர் உரையாக எடுத்துக் காட்டியுள்ள உரையில்
இருந்த பிழையைத் தமிழ் அறிஞர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் செந்தமிழில்
(தொகுதி 16, பக்கம் 98-100) ‘உரை நுட்பம்’ என்ற தலைப்பில் எடுத்துக்காட்டி
விளக்குகின்றார். சரியான பாடத்தையும் நிறுவியுள்ளார்.

     பரிமேலழகர் எடுத்துக்காட்டும் பிறர் உரை பலவாறு ஒவ்வொரு
பதிப்பிலும் உள்ளது.

     1. நாவலர் பதிப்பு (4, 7 ஆம் பதிப்புகள்): “மாலை மயங்கி வரும்
போழ்தென மதிநிலை கலங்கி நோயுழக்கும் என்று உரைப்பாருமுளர்”.

     2. நாவலர் பதிப்பு (8ஆம் பதிப்பு): “மாலை மயங்கி வரும் போழ்து
என்பது நிலை கலங்கி”.

     3. மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு: “மாலை மயங்கி வரும் போழ்து
என்பதி மதிநிலை கலங்கி”.

     4. கோ. வடிவேல் செட்டியார் பதிப்பு: “மாலை மயங்கி வரும்
போழ்தென மதிநிலை கலங்கி” செட்டியார் எழுதியுள்ள விளக்கவுரை:
“மாலை மயங்கிவரும்பொழுது பதிமதி நிலை கலங்கி”.