இவற்றை ஆராய்ந்த ந.மு. வேங்கடசாமி நாட்டார் “இத்தனை பதிப்புகளிலும் உண்மைப் பாடம் வெளிவராதிருப்பது நமக்கு வியப்பைத் தருகின்றது” என்று குறிப்பிடுகின்றார். உண்மையான பாடம் எது என்றும் ஆராய்ந்து தெளிவுபடுத்துகின்றார். “நாவலர் 4, 7-ஆம் பதிப்புக்களில் உள்ள பாடத்தில், “போழ்தென” என்றிருப்பதைப் “போழ்தென்” என்று திருத்திக் கொண்டால் பொருள் பொருத்தமுறுகின்றது. அதுவே உண்மைப் பாடமும் ஆம். ஓர் புள்ளியில்லாத குறையால் புலவர் பலரும் இங்ஙனம் மயங்குவாராயினர்”. மறுப்பும் எதிர்ப்பும் உரையாசிரியர்களுள் பரிமேலழகரைப் பற்றியே மிகுதியான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இவர் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்தனர் சிலர்; உரைத்திறனை நயந்து போற்றினர் சிலர்; இவர் உரையில் பொருந்தாதவை உள என்று எடுத்துக்காட்டி மறுத்தனர் சிலர்; உரைக்கு உரைஎழுதி விளக்கினர் சிலர்; இவரது வடமொழிக் கொள்கைகளை எதிர்த்தனர் சிலர். பரிமேலழகரது உரையைக் கற்றுத் தெளிவதே தமக்குச் சிறப்பு என்று சிலரும், இவரது உரையை மறுத்து வேறுரை காண்பதே தம் புலமைக்குப் பெருமை என்று சிலரும் கருதி இவர் உரையைக் கற்பதில் ஈடுபடுகின்றனர். சுருங்கக் கூறினால் போற்றுதல் தூற்றுதல் ஆகிய இரண்டிற்கும் உரியவராய்ப் பரிமேலழகர் விளங்குகின்றார். பரிமேலழகரின் உரையை மறுக்கும் முயற்சிகள், பரிமேலழகர் புலமைப் பாறையைச் சுற்றியடிக்கும் அலை மோதல்களாக அமைகின்றனவே அன்றி, அப்பாறையின் உருக்கோட்டம் கண்டு செப்பம் செய்யும் சிற்றுளிகாளகக்கூட அமையவில்லை என்பது கா. அப்பாதுரைப் பிள்ளை கருத்தாகும்.* இவர் இவ்வாறு கருதுவதற்குக் காரணங்கள் உள்ளன. பரிமேலழகர் உரைத்திறனையோ, புலமைச் சிறப்பையோ எவரும் குறை கூறுவதில்லை. பரிமேலழகர்க்கு என்று சில கொள்கைகள் உண்டு; கோட்பாடுகள் உண்டு. அவற்றை மிக வன்மையான பின்னணியாகக் கொண்டு தம் உரையை விரித்துச் செல்லுகின்றார். பரிமேலழகரின் கருத்தும் உரைத் திறனும் நன்கு பிணைந்து இறுகி இணைந்து * ‘முப்பால் ஒளி’ முதல் இதழ் - பக்கம் 44. |