பக்கம் எண் :

419ஆய்வு

காரணங்களைக்காட்டி விளக்கியுள்ளார் (பக்கம் 67-97). அந்நூலில்,
பரிமேலழகர் திருவள்ளுவரின் உள்ளக்கருத்தை உணராமல்
மருதத்திணைக்குரிய குறட்பாக்களுக்கு உரை எழுதும்போது பரத்தையர்
பிரிவைப் புகுத்துகின்றார் என்றும் தெ.பொ.மீ. காட்டி, பரிமேலழகர் உரையை
மறுத்துள்ளார்.

3

     சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை திருவள்ளுவர் நூல்நயம்
என்ற நூலில், பரிமேலழகருக்குமுன் திருக்குறளின் ஏழாம் அதிகாரத்தின்
பெயர் மக்கட்பேறு என்று இருந்தது என்றும், அந்த அதிகாரத்தைப்
பரிமேலழகரே புதல்வரைப் பெறுதல் என்று மாற்றிவிட்டார் என்றும்
கூறுகின்றார். ஆனால், பரிமேலழகர்க்கு முற்பட்ட உரையாசிரியர்ககளாகிய
பரிதி முதலியோர் உரைகளிலும் ஏழாம் அதிகாரத்தின் பெயர் புதல்வரைப்
பெறுதல் என்றே உள்ளது. பரிமேலழகர்க்கு முன்னரே இந்த மாறுதல்
நி்கழ்ந்திருக்கிறது. பரிமேலழகர், திருக்குறள் அதிகாரங்களின் பெயரைத்
திருவள்ளுவரே அமைத்தார் என்று கருதுகின்றார். அவர்வயின் விதும்பல்
என்ற அதிகாரத்தை விளக்கும்போது இருவரையும் சுட்டிப் பொதுவாகிய
பன்மைப்பாலால் (திருவள்ளுவர்) கூறினார்’ என்று எழுகின்றார்.

வலிந்து பொருள் காணுதல்

    பரிமேலழகர் சில குறட்பாக்களுக்கு வலிந்து பொருள் காணுகின்றார்;
தம் கருத்தைப் புகுத்திவிடுகின்றார். அத்தகைய இடங்கள் சிலவற்றைக்
காண்போம்.

    அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்பது இல்லாயின் நன்று                 (49)

என்ற குறளின் உரையில் அஃதும் என்பதற்கு, ‘ஏனைத் துறவறமோ எனின்
அதுவும், என்று வலிந்து பொருள் கொள்ளுகின்றார். அது என்ற சுட்டு
இல்வாழ்க்கையைச் சுட்டியதாகவே கொள்ளலாம்.

    தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தால் காணப் படும்                        (114)

என்ற குறளில் உள்ள எச்சம் என்ற சொல்லுக்கு நன்மக்கள் என்று பொருள்
கூறுகிறார் பரிமேலழகர். திருவள்ளுவர், எச்சம் என்ற சொல்லைப் புகழ்
என்ற பொருளில் ஆண்டுள்ளார். ‘இசை என்னும் எச்சம்’ (238) என்பது
இங்கே நினைக்கத் தக்கதாகும். ஆதலின் எச்சம் என்பது மக்களைக்
குறிக்கும் என்பது பொருந்தாது.