வளர வளர இவை கேடுறும்; முடிவில் அழியும். அது போன்று சதுரப் பாடுடைய, திறமைவாய்ந்த அறிவாளிகள், வீரர்கள் அன்னாருக்குப் புகழ்க் காதல் உண்டாகும் பொழுது புகழாகிய கருத்து மனத்தில் உண்டாகும் பொழுது, உடற் சுகம் நாடாமல் நாட்பட நாட்பட அதற்குக் கேடு வருவதையும் உன்னாமல் புகழ் வெஃகி மாய்கின்றனர், உயிர் துறக்கின்றனர்”. 2 குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு (338) என்ற குறளுக்கு உரை எழுதும்போது பரிமேலழகர் ஒழிந்த மற்ற உரையாசிரியர்கள் அனைவரும் குடம்பை என்ற சொல்லுக்குக் கூடு என்றே பொருள் எழுதி உவமையை விளக்குகின்றனர். ஆனால், பரிமேலழகர் மட்டும், குடம்பை என்பதற்கு முட்டை என்று பொருள் எழுதி, “இனிக் குடம்பை என்பதற்குக் கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன் தோன்றாமையானும், அதன்கண் அது மீண்டு புகுதல் உடைமையானும் உடம்பிற்கு உவமையாகாமை அறிக” என்று பிறர் உரையை மறுக்கின்றார். இம் மறுப்புப் பொருத்தமற்றது என்றும், ஏனைய உரையாசிரியர்களின் கருத்தே சிறந்தது என்றும் அறிஞர் பெருமக்கள் கருதுகின்றனர். இனி அறிஞர்களின் கருத்துக்களை காண்போம். “முட்டையை விட்டு வெளிப்படும் உயிரை அப் பருவத்தில் பார்ப்பு என்று சொல்லுதல் வழக்கேயன்றிப் புள் என்று சொல்லுதல் வழக்கன்று. மேலும், முட்டையை விட்டு வெளிப்பட்டவுடன் பறக்கும் பார்ப்பை நாம் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை”. - வ.உ.சி. “முட்டை உருச் சிதையாமல் பார்ப்பு அதனின் நீங்குமாறில்லை. யாக்கை உருச் சிதையாமல் உயிர் நீங்குமாறுண்டு. அது நீங்கிய பின்னர் யாக்கை சிதைவதே ஒருதலை”. - ச. தண்டபாணி தேசிகர் “கருவும் ஓடும் ஒன்றாய்த் தோன்றாது, கரு முதிர்ந்த பின்னரே மேலே உள்ள பச்சை இறுகி ஓடாகின்றது ஆதலானும் அவ்வுரை பொருந்தாது”. - இரத்தினவேல் முதலியார் |