சொல்லும் பொருளும் குடம்பை என்றசொல் சங்க நூல்களில் கூடு என்ற பொருளில் வருகிறதேயன்றி முட்டை என்ற பொருளில் வரவில்லை. பரிமேலழகருக்குப் பின் தோன்றிய பிங்கலத்தை என்ற நிகண்டு மட்டுமே குடம்பை என்பதற்கு முட்டை என்று பொருள் கூறுகின்றது. மரபு உடம்பைக் கூடு என்று கூறுவதே மரபு. கூடலான் கூடாயினான் -சிலம்பு அன்னைவெறுங் கூடு காவல் கொண்டாள் -முத்தொள்ளாயிரம் ஓடாத தேரில் ஒரு கூடு வருவதென்று கூறுங்கோ -நந்திக் கலம்பகம் கூடு விட்டுக் கூடு பாய்தல் -பேச்சு வழக்கு கூடு விட்டிங்கு ஆவிதான் போயின பின்பு -நல்வழி என்ற இடங்களில் எல்லாம் உடம்பைக் கூடு என்று கூறியிருப்பதைக் காணலாம். உவமை பழந்தமிழ் நூல்களில் உடம்பைக் கூடாகவும், உயிரைப் பறவையாகவும் உவமை கூறியிருப்பதைக் காணலாம். அலங்கல் அஞ்சினைக் குடம்பைப் புள்ளெனப் புலம்பெயர் மருங்கிற் புள்எழுந் தாங்கு மெய்யிவண் ஒழியப் போகி, அவர் செய்வினை மருங்கிற் செலீஇயர் இன்உயிரே. அகம் - 113 கேளாதே வந்த கிளைகளா யிற்றோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புட்போல யாக்கை தமர்க்குஒழிய நீத்து. - நாலடி (30) |