பொருள்தெளிவும் கருத்துச்சிறப்பும் அமைந்துள்ளன. உதாரணங்கள் இரண்டினைக் காண்போம்: காதற் காமம் காமத்துச் சிறந்தது விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி (9: 14,15) உரை: “காமத்துச் சிறந்தது காதலையுடைய காமம்; அஃதாவது, மெய்யுற்று அறியாதார் இருவர் அன்பொத்துப்பான்மை வகையால் தாமே மெய்யுற்றுப்புணரும் புணர்ச்சி”. இந்திரன் பூசை இவள்அக லிகைஇவன் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு ஒன்றிய படியிதுஎன் றுரைசெய் வோரும் (19, 50-52) உரை: இப் பூசை இந்திரன்; அவ்விடத்திற்சென்ற கௌதமமுனிவன்: இவன் சின்ன மிகுதலால் இவள் கல்லுருவெய்தியவாறு இதுவென்று கொண்டோற் பிழைத்த தண்டம் கூறுவாருமாய்”. வானநூற் புலமை பரிபாடலில் பதினோராம் பாட்டில் வானநூலைப் பற்றிய குறிப்பு (1-15) இடம் பெற்றுள்ளது. நாள் கோள்களின் நிலை, சந்திரகிரணம் ஏற்படும் காலம் இவற்றைப் பற்றிய குறிப்புக்கள் விரிவாக இடம் பெற்றுள்ளன. பரிமேலழகர், மூலத்தை நன்கு அறிந்து, வானநூற் புலமையுடன் ஆராய்ந்து தெளிந்து நன்கு அப்பகுதியை விளக்குகின்றார். முடிவில் ‘இதனாற்சொல்லியது ஆவணித் திங்கள் அவிட்ட நாளில் இக்கோள்கள் தமக்குரிய நிலமாகிய இவ் இராசிகளில் நிற்பச் சோமனை அரவு தீண்ட என்பதாயிற்று’ என்று தெளிவுபடுத்துகின்றார். இவ்வுரைப் பகுதி இவர்க்கு வான நூலில் ஆழ்ந்த பயிற்சி உண்டு என்பதை உறுதிப்படுத்துகின்றது. உரைத் திறன் “கம்பலைத்தன்று என்பது, உரிச்சொல்லடியாகப் பிறந்த வினைத்திரிசொல்” (8-317) என்று இவர் குறிப்பிடுவது இவரது ஆராய்ச்சித் திறனைப் புலப்படுத்தும். “மாற்றே மாற்றலிலை” (4-53) என்ற தொடரை, “மாற்று ஏமம் ஆற்றல் இலை” என்று பிரித்து, “மாற்றுதல் தொழிலும் அதற்கு ஏமம் செய்தல் தொழிலும் உடையை அல்லை” என்று இவர் உரை எழுதி இருப்பது இவரது புலமை நுட்பத்தை வெளிப்படுத்தும். நயவுரை பரிமேலழகர் நயமாக உரை காணும் இடங்கள் சிலவற்றை இங்கே காண்போம். |