6 திருக்குறள் சிந்தனைகள் 1. புதிய உரைகள் திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரை தோன்றிய பின், அவ்வுரைக்கு விளக்கம் எழுதிப் பரப்புகின்ற முயற்சி, சில நூற்றாண்டுகள் தொடர்ந்து நடை பெற்றது. காலப்போக்கில் புதிய உரை காணும் முயற்சி தோன்றியது. இம் முயற்சி பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றியது. வீரமாமுனிவர், நாகை தண்டபாணியார், ஈக்காடு சபாபதி முதலியார், திரு.வி.க. ஆகியோர் இம் முயற்சியில் ஈடுபட்டனர். திரு.வி.க.வின் உரை முதல் நூறு குறட்பாக்களுக்கே (விருத்தியுரையாய்) உள்ளது. ஆழ்ந்த பொருளும், விளக்கமும் இலக்கியச்சுவை முதிர்ந்த நடையும் இவர் உரையின் சிறப்பியல்புகளாகும். காலத்திற்கேற்ற கருத்தைக் குறளில் காண விரும்பி, சில இடங்களில் புதிய உரை கண்டுள்ளார். நாகை தண்டபாணியார் அறத்துப்பாலுக்கு மட்டும் விருத்தியுரை கண்டுள்ளார். பெரும்பான்மையான இடங்களில் பரிமேலழகர் உரைக்கு விளக்கம் கூறி, சில இடங்களில் வேறுரை கண்டுள்ளார். வ.உ.சி.யின் உரை, அவர் மேற்கொண்ட புதிய பாடங்களாலேயே கருத்து வேறுபாடு உடையதாய் அமைகின்றது. திருச்சி வரதராசன் எழுதியுள்ள விளக்கவுரை எளிமையானது; சிறிதளவு தமிழறிவு உடையவரும் படித்துப் பயன் பெறும் தகுதியுடையது. செய்யுள் வடிவில் திருக்குறளுக்கு உரைகள் தோன்றியுள்ளன. குட்டிக் குறள், திருக்குறள் அகவல், திருக்குறள் இசைமாலை முதலிய நூல்கள் செய்யுள்வடிவ உரைகள். பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் திருக்குறள் உரைகள் பல தோன்றின. கா. சுப்பிரமணிபிள்ளை, அருணாசலக் கவிராயர், டாக்டர் மு. வரதராசனார், டாக்டர் சுப்பிரமணிய சாஸ்திரியார் ஆகியோர் |