பக்கம் எண் :

உரையாசிரியர்கள்430

எளிய பொழிப்புரை எழுதித் திருக்குறளைப் பரப்பினர். டாக்டர்
வ.சுப.மாணிக்கம், பால்வண்ணனார் ஆகிய இருவரும் எழுதிய உரைகளும்
இத்தன்மையானவையே.

     நாமக்கல் கவிஞர். ந. சி. கந்தையா பிள்ளை, ஞானபூபதி
ஆகியோருடைய உரைகள் காலத்திற்கேற்ற உரைகள்; வாழ்க்கை
அனுபவத்தை ஒட்டி இயற்றப்பட்ட உரைகள்.

     தேவ நேயப்பாவாணரின் மரபுரை, பல நல்ல புதிய விளக்கங்களைக்
கொண்டுள்ளது. பின்னங்குடி சா.சுப்பிரமணிய சாஸ்திரி எழுதிய உரை
வடமொழிக் கருத்துகளை, வலியத் திணிக்கின்றது.

     புலியூர்க்கேசிகன் புதுவுரை, பொழிப்புரையாய் - எளிய உரையாய்
விளங்குகின்றது.

     புலவர் குழந்தை, பாரதிதாசன் இருவரும் பகுத்தறிவுக் கொள்கையைப்
பரப்பவும், வடமொழிக் கொள்கையை எதிர்க்கவும் திருக்குறளுக்குப் புதிய
உரைகள் எழுதினர்; தமிழ் மக்களிடையே சில குறள்களுக்குப் புதிய உரை
கூறி, ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்தனர். ‘தெய்வந்தொழாஅள்,’
‘ஆபயன் குன்றும்’ ஆகிய குறட்பாக்களின் மீது இதற்குமுன் கண்டிராத
புதிய விளக்கம் சுமத்தப்பட்டது.

     இத்தனை உரைகள் தோன்றியும், இன்னும் புதிய உரைகள் காணும்
முயற்சியும் ஆர்வமும் தமிழகத்தில் உள்ளன. அவற்றை ஊக்குவிப்போரும்
உள்ளனர்; ஆவலோடு வரவேற்கும் மக்களும் உள்ளனர்.

2. உரை வேற்றுமை

    திருக்குறளுக்குப் பல உரைகள் தோன்றியிருப்பதால் அவற்றை ஒப்பிட்டு
நோக்குவது இன்பம் பயக்கும் ஆராய்ச்சியாகும். ஒரு சொல்லுக்குப் பலரும்
கூறும் பொருள், ஒரு தொடருக்குத் தரும் விளக்கம், ஓர் உவமைக்குத் தரும்
நயவுரை ஆகியவற்றை இங்கே காண்போம்:

ஒருவந்தம்

    பரிமேலழகர்: ஒருவந்தம் - ஒருதலை (563), நிலைபேறு (593).

    காலிங்கர்: ஒரு வந்தம் - பெருஞ்செல்வம் (563).

வெறுக்கை

    பரிமேலழகர்: வெறுக்கை - மிகுதி (600).