பக்கம் எண் :

431ஆய்வு

     காலிங்கர்: வெறுக்கை - செல்வம் (600).

     “வெறுக்கை என்பது செல்வம் என்றும், வெறுப்பு என்றும்
சொல்லுவாரும் உளர்.”

இயல்புடைய மூவர்

    இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை              (41)

    பரிமேலழகர்: இயல்புடைய மூவர் பிரமசாரி, வானப்பிரஸ்தன்,
சந்நியாசி என்கிற மூவர்.

      திரு.வி.க: பண்பு வாய்ந்த ஊர் மன்றத் தலைவராகிய மூவர்க்கும்:
திருவள்ளுவர் மூவேந்தர் நினைவுடன் மூவர்க்கும் என்று குறித்திருக்கலாம்.

      வ. உ. சி: இயல்பாக உடைய தாய், தந்தை, தாரம் என்னும் மூவர்.

      குழந்தை: துறந்தார், துவ்வாதார், இறந்தார் என்னும் மூவர்.

      நாமக்கல்லார்: உறவினர், நண்பர்கள், ஏழைகள் என்ற மூவர்.

உவமை

    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று      (100)

     பரிமேலழகர்: இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க
அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்தனோடு ஒக்கும்.

     மணக்குடவர்: பழமும் காயும் ஓரிடத்தே இருக்கக் கண்டவன்
பழத்தைக் கொள்ளாது காயைக்கொண்ட தன்மைத்து.

     பரிதியார்: நல்ல பழம் இருக்க வேப்பங்காயைத் தின்பதற்கு ஒக்கும்.

     காலிங்கர்: நம் இல்லகத்து இனிய கனி உளவாய் இருப்பவன்காயைப்
புறத்துச்சென்று நுகர்ந்து விரும்பினாற் போலும்.

3. ஆய்வுரை

     திருவள்ளுவரின் உள்ளக் கருத்தை அறிய, கால இடைவெளியைக்
கடந்து செல்ல வேண்டியுள்ளது: வாழும் இடத்தின் சுற்றுச்சூழலை -
பழக்கவழக்கங்களைக் கடந்து சென்று கடந்த காலத்துடன் இணைய
வேண்டியுள்ளது. திருவள்ளுவர் காலத்துச் சொற்களுக்குப் பொருளும்,
அவர் காலத்து மொழியமைப்பின் இயல்பும் அறிய வேண்டியுள்ளது.