பக்கம் எண் :

உரையாசிரியர்கள்432

     அடுத்து வருகின்ற பகுதிகளில், சில குறள்களுக்கு உண்மையான
பொருளைத் தேடும் முயற்சியில் ஈடுபடுவோம்; முயற்சியில் வெற்றி பெற்று,
திருவள்ளுவர் அருகே சென்று அவரைக் கண்டுகளிப்போம். அவர் வாக்கின்
பொருளறிந்து போற்றுவோம்.

1. பெய்யெனப் பெய்யும் மழை

     “மலையிலே வாழ்கின்ற மக்கள், அறநெறிக்கு மாறாக நடக்கின்றனர்;
தீய செயல்களைப் புரிகின்றனர்! அதனால், வள்ளிக்கிழங்கு நிலத்திற்குள்
இறங்கி முற்றி விளையப்போவதில்லை! மலைமீது தேனீக்கள், தேன் திரட்டிக்
கூடு கட்டப் போவதில்லை! தினைக்கொல்லைகளில் தினைக்கதிர்
முற்றிவிளையப் போவதில்லை!” என்று ஒரு குறிஞ்சிப் பெண் கூறுகின்றாள்.

     இது கலித்தொகைப் பாடல் ஒன்று காட்டும் இனிய காட்சி (கலி. 39;
42-48)

     மக்கள் தவறு செய்கின்றபோது - அறத்தை மதிக்காமல் வாழும்போது
இயற்கை தண்டிக்கும் என்ற நம்பிக்கை இதனால் வெளிப்படுகின்றது.

1

     பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் முடிந்து, மறைந்து வாழ்ந்த
கொண்டிருக்கின்றனர் பாண்டவர்கள். ‘அவர்கள் எங்கே இருக்கின்றனர்?
என்ன கோலத்தில் மறைந்திருக்கின்றனர்? என்ன செய்துகொண்டு
இருக்கின்றனர்?’ என்று அறிய விரும்புகின்றான், துரியோதனன். அதனால்,
பல்வேறு நாடுகளுக்கு ஒற்றர்களை அனுப்பி ஆராய்கின்றான். ஒற்றர்கள்
திரும்பி வந்து “எங்கும் பாண்டவர்களைக் காணவில்லை!”என்று கூறி
விடுகின்றனர்.

     உடனே வீடுமர் “பாண்டவர்கள் வாழ்கின்ற நாட்டில் மழை தவறாமல்
பெய்யும்; அதனால் விளைச்சல் மிகுதியாக இருக்கும். மக்கள் மகிழ்ச்சியுடன்
வாழ்வர். சென்று தேடிப்பாருங்கள்!” என்று தேடுவதற்கு உபாயம் கூறினார்.

     அவ்வாறே ஒற்றர்கள் சென்று தேடினர். அவர்களில் ஒருவன், “விராட
நாட்டில் நல்ல மழை பெய்து, வளம் கொழிக்கிறது. மக்கள் மகிழ்கின்றனர்”
என்று கூறுகின்றான் (வில்லி. நிரைமீட்சி-5, 6).

     பாண்டவர்கள், விராட நாட்டில் இருப்பதை அறிந்து கொள்ளுகின்றான்
துரியோதனன்.