பக்கம் எண் :

435ஆய்வு

அந்த மலரை நான்கு குறட்பாக்களில் (90, 111, 115, 1120) போற்றிக்
கூறியுள்ளார்.

     சங்க நூல்களில் அனிச்ச மலர், கபிலரால் குறிஞ்சிப் பாட்டில் மட்டுமே
கூறப்பட்டுள்ளது. அதிலும், விளக்கமான வருணனை இல்லை.* ஆதலின்
அனிச்சமலரின் வண்ணம் வடிவம் பற்றி அறிய முடியவில்லை. அது கொடிப்
பூவா? அது கோட்டுப் பூவா? நீர்ப் பூவா? தெரியவில்லை!

     1938-ஆம் ஆண்டில் வெளிவந்த கரந்தைக் கட்டுரைகள் என்னும்
ஆய்வு நூலில், மா. ந. சோமசுந்தரம்பிள்ளை அனிச்சமலர் பற்றி
அறிவித்துள்ளார். அவர் தந்துள்ள விளக்கம் பின்வருமாறு:

     “இவ் அனிச்ச மலர், இன்னது எனப் பலரும் அறியார். புதற்பூ
என்பாரும் நீர்ப் பூ என்பாரும் உளர்.

     அது கோட்டுப் பூவே.

     வேதாரணியத்தை அடுத்த ஊர் (Railway Station) ஆகிய குறவப்புறம்
என்பதன் மேற்பால், ஐயனார் கோயில் தோட்டத்தில் நிறைய உள்ளன.

     கிளையும் இலையும் சிறு சண்பகம்போல்வது. மாசி பங்குனியில்
நீர்க்கடம்பு போல். கொத்துக் கொத்தாகப் பூக்கும். மாலையில் மலரும்.
விடியற்காலத்தில் மலர்கள் பொடியாய் உதிர்ந்து கிடக்கும். காய் முற்றில்,
வங்குஸ்தான் காய்போல வலிதாய் இருக்கும். மலர்கள் வெண்கடம்புபோல்
நறுமணம் உள்ளதாக இருக்கும். செவந்த கோடுகள் படர்ந்த வெள்ளைப்
பூக்கள்.

     கோயில் சிறு தேருக்கு (சப்பரத்துக்கு) அணியப்படும். அரசர்
கோயிலில் அணையில் பரப்பப்படும்.

     இம் மலரை நேரில் பார்த்து அறிதல் வேண்டும்.”

     இவ்வாறு சோமசுந்தரம் பிள்ளை கூறியுள்ளார்.

     இன்று அந்த இடத்திலும் அனிச்ச மலரைக் காண முடியாது! ஏனெனில்
அங்கே இருந்த ஒரே ஒரு அனிச்ச மரமும் பட்டுப் போய்விட்டது!

3. வற்றல் மரம்

    அகநானூறு ‘வற்றல்’ என்னும் ஒரு வகை மரத்தைக் குறிப்பிடுகின்றது.
கயமனார் பாடிய பாலைப் பாட்டில்,


* சீவக சிந்தாமணி, பெருங்கதை ஆகியவற்றில் அனிச்சமலர் பற்றிய
குறிப்புகள் உள்ளன.