யார் நன்மை பெறுவர்? பாலை நிலத்தில் வற்றல் என்னும் ஒருவகை மரம் தளிர்த்து நின்றால் யாருக்கு அதனால் பயன் உண்டு? வற்றல் மரம் தான் மட்டும் தளிர்க்கின்றது; வாழ்கிறது. பாலை நிலத்தில் யாருக்கும் பயன் படாமல் நிற்கிறது. அன்பகத்தில் இல்லா உயிர் வாழ்க்கையும் வற்றல் என்னும் மரத்தின் வாழ்க்கையைப் போன்றதே. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. என்ற குறள், அன்பில்லா வாழ்க்கையை, பாலை நிலத்தில் வற்றல் என்னும் மரம் தளிர்த்து நிற்பதற்கு ஒப்பிடுகின்றது. இக்குறளுக்குப் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் அனைவரும் வேறு உரை கூறுகின்றனர்; வற்றல் மரம் என்பதற்குப் பின்வருமாறு பொருள் கூறுகின்றனர்; வற்றலாகிய மரம் - பரிமேலழகர் உலர்ந்த மரம் - மணக்குடவர் பட்டமரம் - பரிதியார் வறலாகிய மரம் - காலிங்கர் தளிர்த்தற்று என்பதற்குப் பின்வருமாறு விளக்கம் எழுதுகின்றனர். (தளிர்க்காது என்று பொருளில்) “கூடாது என்பதாம்”- பரிமேலழகர். “தளிர்த்தற்குக் காரணம் இன்மையால் தளிர்க்காது”- மணக்குடவர். “வற்றலாகிய மரம் பின்பு தளிர்த்த அத்தன்மை போல, இவனுக்கு வெறும் தோற்றமே அன்றிப் பின் ஆக்கம் இல்லை என்பது கருத்து” - காலிங்கர். தளிர்த்தற்று என்பதற்கு இவர்கள் கூறும் உரை போதிய விளக்கம் இன்றி உள்ளது. எனவே, வற்றல் என்பதற்குப் பட்டுப்போன மரம் என்று பொருள் கொள்ளாமல், வற்றல் என்னும் ஒருவகை மரம் என்று பொருள்கொள்ளுதல் சிறந்ததாகும். அவ்வாறு கொள்ளாமல் பழங்கால உரையாசிரியர்களைப் போற்றி அவர்கள் உரையையே கொள்ளுவோம் என்றால், அகநானூற்று உரையைத் திருத்த வேண்டும்! 4. கவரிமா சங்கப் புலவர்கள் தம் பாடல்களில் தமிழ்நாட்டுச் செடி கொடி மரம் பறவை விலங்கு ஆகியவை பற்றிய உண்மையான |