செய்திகளை, தெளிவாக அறிந்து விளக்கமாகப் பாடியுள்ளனர். அவை இன்றைய அறிவியல் கருத்துக்களோடு பொருத்தமாய் உள்ளன என்பதை ஆராய்ச்சி அறிஞர் பி.எல். சாமி, செந்தமிழ்ச் செல்வியில் கட்டுரைகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். அவரது கட்டுரைகள், பண்டை இலக்கியத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளப் பெரிதும் உதவுகின்றன. அவரால் விளக்கம் பெற்ற அரிய செய்திகளில் ஒன்று ‘கவரிமா’வைப் பற்றியது.* அச் செய்தியால், மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் (969) என்ற குறட்பா இனிது விளங்குகின்றது. கவரி, தமிழ்நாட்டு விலங்கு அன்று. வடநாட்டில் - இமயமலையில் வாழ்கின்ற விலங்குகளில் ஒன்று. இதனைச் சங்கப் புலவர்கள், நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி, .... பிணையொடு வதியும் வடதிசை யதுவே வான்தோய் இமயம் (புற: 132) கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி, .... நரந்தம் கனவும் .... பேரிசை இமயம் (பதிற்: 11, 21-23) என்று பாடியுள்ளனர். ‘இமயமலையில் காட்டுப் பகுதியில் நரந்தம் என்னும் மணமுள்ள புல்லை மேய்ந்து வாழ்கின்ற கவரி’ என்று கூறியுள்ளனர். மா என்ற சொல், எல்லா விலங்கையும் குறிக்கின்ற பொதுச் சொல். கவரி, விலங்கு ஆதலின் அதனைக் கவரிமா என்றனர். காலப்போக்கில் கவரிமா என்ற சொற்றொடர், ‘கவரிமான்’ ஆகிவிட்டது. கவரியை, மான் இனத்தில் ஒன்றாகக் கருதிவிட்டனர்! கவரிமா, ‘யாக்’ (Yak) என்ற பெயருடன் வாழ்ந்து வருகின்றது. கலைக்களஞ்சியம் (3:பக்-357, 358) கவரிமாவைப் பற்றிப் பின் வருகின்ற செய்திகளைக் கூறுகின்றது: “கவரிமா (Yak): இது திபெத்து நாட்டில், மிக உயர்ந்த மலைகளில் வாழும் எருது வகையாகும். இது உலகத்தில் மிகக் குளிர்ந்தவையும் மிக உயர்ந்தவையுமான மலைகளில் வாழும் * சங்க இலக்கியத்தில் - விலங்கின விளக்கம் (1970) பக். 454, 464. |