பிராணிகளில் ஒன்று. இது, குளிர் காலத்தில்கூட 14000-20000 அடிக்குக் கீழே வருவதில்லை. இந்தியாவில், லடாக் பகுதியில் ‘சங்க சென்மோ’ பள்ளத்தாக்கில் மட்டுமே காணப்படுகிறது. இதில் காட்டுக் கவரிமா, வீட்டுக் கவரிமா என இரு வகைகள் உண்டு. காட்டுக் கவரிமா: இது 6 அடி உயரமும் 1200 இராத்தல் எடையும் இருக்கும். கொம்பு 25-30 அங்குல நீளம் உடையது. இது பெரிய விலங்கு உயர்ந்த திமிலும், நேரான முதுகும் குட்டையான தடித்த கால்களும் உடையது. ஆனால், எப்போதும் மூக்கு ஏறக்குறையத் தரையைத் தொடும் அளவு தலை தொங்கியே இருக்கும். கவரிமா உடல் முழுவதும் மிகக் கரிய அல்லது கரும்பழுப்பான மயிர் மூடி இருக்கும். தோள் விலா வால் ஆகியவற்றிலுள்ள மயிர் நீளமாயும் பட்டுப்போல் மிருது வாயும் இருக்கும். சில வேளைகளில் அது தரையைத் தொட்டுக் கொண்டும் இருக்கும். வீட்டுக் கவரிமா: காட்டுக் கவரியும் மங்கோலிய மாடும் சேர்ந்து வீட்டுக் கவரிமா உண்டாய் இருக்கிறது. இதன் நெஞ்சிலும் வாலிலும் வெள்ளை நிறம் காணப்படும். கொம்புகள் பெரியனவாக இரா. இதன் மயிர், காட்டுக் கவரிமாவின் மயிரைவிட நீளமாய் இருக்கும். வாலில், மயிர் அதிகமாய் இருக்கும். இதன் வாலின் குஞ்சமே இந்தியாவில் கவரியாகவும் சாமரமாகவும் பயன்படுகிறது. சீனர்கள் இதற்குச் செஞ்சாயம் ஊட்டி தொப்பிகளில் அணிகிறார்கள்.” இன்றும் இமயமலையில் வாழ்ந்துவரும் கவரிமாவைப் பற்றிக் கலைக் களஞ்சியம் கூறுகின்ற செய்தி, சங்கப் புலவர்கள் பாடியுள்ள கருத்துடன் பெரிதும் ஒத்துள்ளது. 1. கவரிமாவைப் பற்றி முன்னர்க் காட்டிய இரண்டு இடங்களிலும் காட்டுக் கவரிமா கூறப்பட்டுள்ளது. 2. வீட்டுக் கவரிமாவின் வெண்மையான வால் மயிரைக் கொண்டு வந்து சாயம் ஊட்டி, பழந்தமிழ்மக்கள் அழகுப் பொருளாய்ப் பயன்படுத்தினர். இன்று சீனர் கவரி மயிருக்குச் செஞ்சாயம் ஊட்டித் தொப்பிகளில் அணிவது போல, பழங்காலத் தமிழர்கள் கவரி மயிருக்குச் சாயம் பூசி, குதிரைகளின் தலையில் குஞ்சம் கட்டினர். இதனைப் பதிற்றுப் பத்து ‘ஆய் மயிர் கவரிப் பாய்மா’ என்று குறிப்பிடுகின்றது. முற்காலத்து மகளிரில் சிலர், குறைவான தம் கூந்தலை அழகுபடுத்தக் கருமை நிற |