மயிர் உதிர்வது இயல்பு. (3) சிறியதாய் உள்ள விலங்கு (குட்டி) வளர வளர பழையமயிர் உதிர்ந்து புதிய மயிர் வளரும். (4) பிறந்தபோது உள்ள நீளமான மெல்லிய மயிர், விழுந்து வலிமையான மயிர் முளைக்கும். ஆதலின், தன் மயிர் உதிர்வதற்கு வருந்தி உயிர்விடுகின்ற விலங்கு இருக்க முடியாது. 6. காலிங்கர், கவரிமாவிற்கு அலங்காரமான மயிர்க்கற்றை இருப்பதாய்க் கூறுகின்றார். இது, அவ்விலங்கின் எந்த உறுப்பில் உள்ளது என்று அவர் கூறவில்லை. விலங்கியலார், கவரிமாவின் வாலில் வெண்மையான மயிர்க்கற்றை இருப்பதாய்க் குறிப்பிடுகின்றனர். அந்த விலங்கைப் படம் பிடித்துக் காட்டுகின்றனர். கவரி வாலின் மயிர்த்திரள், காலிங்கர் கூறியிருப்பது போல அலங்காரமாக இல்லை. அதனைக் கண்டு (பின்புறத்தில் இருப்பதால்) கவரிமா, மகிழவும், மானத்திற்கு அடையாளமாகக் கருதவும் இயலாது. இவற்றை நோக்கும்போது, உரையாசிரியர்கள் கவரிமாவைப் பற்றிக் கூறியுள்ள செய்திகள் யாவும் உண்மைக்கு மாறானவை; இயற்கைக்குப் பொருந்தாதவை என்பது விளங்கும். 5. பாயிரம் திருக்குறளில் உள்ள முதல்நான்கு அதிகாரங்கள் பாயிரம் எனப்படும். திருவள்ளுவமாலையில் உள்ள சில பாடல்கள், அந்நான்கு அதிகாரங்களையும் ‘பாயிரம்’ என்று குறிப்பிடுகின்றன. திருக்குறள்பாயிரம், ஆராய்ச்சி உலகில் பல ஐயங்களைக் கிளப்பியுள்ளது. பாயிரம் பற்றிப் பல வினாக்கள் தோன்றியுள்ளன; காலந்தோறும் அந்த வினாக்களுக்கு விடைகள் பிறந்துள்ளன. பாயிரத்தைப் பற்றி ஆராய்ந்தவர் கூறியுள்ள கருத்துகள் கீழே தரப்படுகின்றன: வ. உ. சிதம்பரனார் “திருக்குறட் சுவடிகளில், பாயிரத்தின் முதல் மூன்று அதிகாரங்களாகக் காணப்படும், கடவுள் வாழ்த்து வான் சிறப்பு நீத்தார் பெருமை என்னும் மூன்று அதிகாரப்பாக்களும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டவை அல்ல என்றும், அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமும் |