நூலில் கடவுளின் பொதுஇயல்பும் (தடக்க இலக்கணமும்) சிறப்பு இயல்பும் (சொரூப இலக்கணமும்) கூறி அவரை வாழ்த்துதல் கற்றறிந்த மாந்தர் கடன் என்றும் கடவுளை வாழ்த்தியபின் பயனும் கூறப்படுகின்றன. இதனை ஊன்றி ஆராயின் கடவுளை வாழ்த்துதலும், தலையாய அறம் அல்லது ஒழுக்கம் என்பது உணர்த்தப் பெற்றதே அன்றி ஏனைய நூல்களைப் போல, கடவுளை வாழ்த்தவில்லை” -திருக்குறள் அமைப்பும் அழகும்: பக். 58. கடவுள் வாழ்த்துப்பற்றி இத்தகைய சிந்தனைகளை எழுப்பியுள்ள இவர், மற்ற மூன்று அதிகாரங்களாகிய வான் சிறப்பு நீத்தார் பெருமை அறன் வலியுறுத்தல் ஆகியவை பற்றிய தம் கருத்தை விளக்கவில்லை. மு. இராகவ அய்யங்கார் “கடவுள் வாழ்த்து முதலிய நான்கு அதிகாரங்களை மட்டும் பாயிரமாக வள்ளுவனார் தனியே கொண்டது எக்காரணமு் பற்றி என்ற கேள்வி நெடுக நிகழ்ந்து வருவது உண்டு. இதற்குத் தக்க விடை இதுகாறும் கிடைக்கவில்லை. ஆயினும் தொல்காப்பியனார் கூறும், கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (புறத்திணை - 33) என்னும் சூத்திரத்தில், உயர்பின் வழிவரும் ஒரு சொல்லைக் கடவுள் வாழ்த்தோடு கூறுதலால் அவ் வாழ்த்து, முதற்கண் கூறும் சிறப்புடையது என்பதும், மற்றவை அதன் பின்னர் வைத்து வாழ்த்தப் படுதற்கு உரியன என்பதும் அறியத்தக்கன. இவற்றுள், கொடிநிலை மேகத்தை உணர்த்தும். கீழ்த்திசைக் கண்ணே நிலைபெறுதலை உடையது; நீடனிலையுடையது என்பன இதன்பொருளாம். நச்சினார்க்கினியரும் இவ் இரு பொருள்களே பற்றி, சூரியனுக்கு இப்பதத்தை இணக்குதல் காண்க. மேகவாகனனாகிய இந்திரனுக்கு உரிய திசை ஆதலின், அத்திசை மேகத்திற்கு உரியது என்பதும், அங்கு நின்று எழுந்த கொண்டல்களே உலக தாபம் தீரப் பெய்வன என்பதும் அறியத்தக்கன. இவ்வாறு அன்றி மின்னற் கொடிக்கு நிலைக்களன் ஆதல் பற்றி மேகம் கொடிநிலை எனப்பட்டது என்றுமாம். கந்தழி - பற்றழிவு. அஃதாவது பற்றழிந்தார் தன்மை என்றவாறாம். |