வள்ளி என்பது அறம். நச்சினார்க்கினியருக்கும் இக் கருத்து ஆதல், “வெண்கதிர் தேவர்க்கு அமிர்தம் வழங்கலான் வள்ளி என்பதூஉம் அறிக” என்று அவர் கூறுவதிலிருந்து, வண்மையடியாகவே இச் சொல் வழங்கியது ஆதல் தெளிவு. ஆகவே, இந்த நான்கும் கடவுள்வாழ்த்தொடு கண்ணிய வருவனவாகிய இம் மூன்றையுமே ஆதல் தெளியலாம்” -பொருளதிகார ஆராய்ச்சி. எஸ். அநவரத விநாயகம் பிள்ளை “அருகக் கடவுளுக்கு உரிய மலர் மிசை ஏகினான், அறவாழி அந்தணன் முதலிய பெயர்கள் காணப்படுதலாலும்; கடவுள் வாழ்த்து முதலிய நான்கு அதிகாரங்களும் அருக சரணம் முதலிய நான்கு சரணங்களைக் குறிக்க எழுந்தனபோல் நிற்றலாலும்; அருகர் இயற்றிய நூல்களுள் திருக்குறளினின்றும் மேற்கோள்கள் எடுத்து வழங்கப்பட்டமையாலும் திருக்குறள் ஆசிரியர் சைனர் என்று உரைப்பர் சிலர்’ -திருவள்ளுவர் (1953) பக் - 15; ந.சி. கந்தையா பிள்ளை (மேற்கோள்) சுப. இராமநாதன் “இந்நான்கு அதிகாரங்களையும் கடவுள் வாழ்த்தாகக் கொள்வதே பொருந்துவதாகும். திருவள்ளுவர், சமண சமயத்தவராய் இருக்கலாம் என்பதே பெரும்பான்மையோர் கருத்தாகும். சமணர்கள், அருக சரணம் சித்த சரணம் சாது சரணம் தன்ம சரணம் என்ற நால்வகைச் சரணங்களைக் கூறுபவர்கள் குறளின் முதலாவது அதிகாரம், கடவுள் வாழ்த்து - அருகசரணமாகவும், மூன்றாவது அதிகாரம், நீத்தார் பெருமை - சாது சரணமாகவும், நான்காவது அதிகாரம், அறன் வலியுறுத்தல் - தன்ம சரணமாகவும் கொள்ளப் பொருத்தமாய் உள்ளன. வான் சிறப்பு என்ற அதிகாரத்தைச் சித்த சரணத்திற்குப் பொருந்தக் கூடியதாகக் கொள்வோமானால் இந்த நான்கு அதிகாரங்களாலும் கடவுள் வாழ்த்துக் கூறப்பெற்றதாக அமையும். |