சமணர்கள் இந் நால்வகைச் சரணங்களையும் கடவுள் வாழ்த்தாகக் கூறுவதனைச் சிந்தாமணிக் கடவுள் வாழ்த்துப் பகுதியில் காணலாம். -இலக்கியச் சிந்தனைகள் - பக்; 85. 4. முதற்குறள் விளக்கவுரைகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சமய உலகில் முதற் குறள், பல விளக்கங்களைப் பெற்றது. வேதாந்தமும் சிந்தாந்தமும் மோதின. துவைதமும் அத்வைதமும் போராடின. ஒவ்வொரு சமயமும் தமக்குச் சார்பாக முதற்குறளுக்கு விளக்கம் கண்டது. மறுப்புரை எழுந்தன. மறுப்புக்கு மறுப்புப்பிறந்தது. அந் நூல்களை எல்லாம் தொகுத்துப் பார்த்தால் பல சிறந்த செய்திகள் புலப்படுகின்றன. முதற் குறளுக்கு ஏற்பட்ட விளக்கவுரைகளைக் காண்போம். 1. சூளைச் சோமசுந்தரநாயகர் ஆங்கீரச ஆண்டு தை மாதத்தில் ‘சிந்தாந்த சேகரம்’ என்னும் நூலில் முதற் குறளுக்கு விளக்கம் தந்து அத்வைதத்தை மறுத்தார். 2. சிந்தாந்த சேகர நூலை மறுத்து ‘ஆரியன்’ என்பவர், ‘திருவள்ளுவர் முதற் குறள்’ என்னும் நூலை 8 பக்க அளவில் இயற்றினார். 3. இதே காலத்தில், சித்தாந்த சேகரத்தில் நாகப்பட்டினத்திலிருந்து ஒரு மறுப்பு நூல் வந்தது. நாகைவாதி என்பவர், நாகையிலிருந்து வெளிவந்த ‘ஸஜ்ஜன பத்திரிக்கை’ என்ற இதழில் மறுப்புரை எழுதினார். 4. நாகைவாதியை மறுத்து, முருகவேள் என்னும் துவிதசைவர், ‘நாகை நீலலோசனி’ என்னும் இதழில் மறுப்புத் தந்தார். 5. முருகவேள் கருத்திற்கு எதிர் நூலாகத் தோன்றியது 16 பக்கமுள்ள ‘முதற் குறள் வாதம்’ என்னும் நூல். இதனை இயற்றியவர், துவிதமத திரஸ்காரி என்பவர். 6. முதற் குறள் வாதத்தை மறுத்து (வேதாசலம் பிள்ளை என்ற பெயருடன் இருந்த) மறைமலையடிகள் 52 பக்க அளவில் முதற் குறள் வாத நிராகரணம் என்ற நூலை இயற்றினார். 7. முதற் குறள் வாத நிராகரணத்தை மறுத்து, 250 பக்க அளவில் முதற் குறள் உண்மை அல்லது முதற் குறள் வாத நிராகரண சத தூஷணி என்ற நூலை, சாது இரத்தின செட்டியார் (துவித மத திரஸ்காரி) இயற்றினார் (1900). |