7 காப்பிய உரையாசிரியர்கள் தமிழகத்திற்குத் திருவேங்கடம் போன்ற மலைகளால் ஏற்படும் சிறப்பைவிட - காவிரி போன்ற ஆறுகளால் உண்டாகும் பெருமையைவிட - தஞ்சைப் பெரிய கோயி்ல் போன்ற கலைச் செல்வங்களால் தோன்றும் மாண்பைவிட-சிறந்த கவிஞர் பெரு மக்கள் இயற்றிய பெருங்காப்பியங்களால் ஏற்படுகின்ற புகழ் மேலானது. பாரதியார், காப்பியத்தைத் தீஞ்சுவைக் காவியம் என்று பாராட்டுகின்றார். காப்பியம் கள்ளைப் போல் மயக்கும்; தீயைப் போல் சுடும்; காற்றைப் போல் இனிமை தரும்; வானவெளியைப் போல் பரந்து கிடக்கும். காப்பியம் பல இயற்றியுள்ள சான்றோர்களைத் தெள்ளு தமிழ்ப் புலவர்கள் என்று பாரதியார் போற்றிப் பாடுகின்றார்: கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல காற்றையும் வானவெளியையும் சேர்த்து தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். தமிழிலுள்ள காப்பியங்களை ஐம்பெருங் காப்பியங்கள் என்றும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் இருவகையாகப் பிரித்துள்ளனர். இந்தப் பிரிப்புமுறை, வடமொழியை நோக்கி அமைக்கப்பட்டதாகும். சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களை அடுத்துத் தோன்றிய பெருங்கதை, மேலே கூறிய பாகுபாட்டில் இடம்பெறவில்லை. பெருங்காப்பியத்திற்கு உரியதகுதிகள் யாவும் அதற்கு இருந்தும், அது காப்பிய வரிசையில் வைத்து எண்ணப்படவில்லை. சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி வளையாபதி குண்டலேகேசி ஆகியவை ஐம்பெருங்காப்பியங்களாகும். இவை தமிழன்னை பொலியச் சூடிய புலமை அணிகளாய் விளங்குகின்றன. சுத்தனாந்த பாரதியார், |