பக்கம் எண் :

உரையாசிரியர்கள்448

    காதொளிரும் குண்டலமும் கைக்குவளை
         யாபதியும் கருணை மார்பின்
    மீதொளிர்சிந் தாமணியும் மெல்லிடையில்
         மேகலையும் சிலம்பார் இன்பப்
    போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ
         ளாமணியும் பொலியச் சூடி
    நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
         தாங்குதமிழ் நீடு வாழ்க

என்று தமிழன்னைக்குக் காப்பிய அணிகளைச் சூட்டி மகிழ்கின்றார்.

     ஐம்பெருங்காப்பியத்தை அடுத்துத் தோன்றியவை, நீலகேசி சூளாமணி
உதயணன்கதை யசோதர காவியம் நாககுமார காவியம் என்பன. இவற்றை
ஐஞ்சிறு காப்பியங்கள் என்பர்.

     ஐம்பெருங்காப்பியங்களுள், வளையாபதி குண்டலகேசி ஆகிய
இரண்டும் மறைந்துபோயின. இவற்றுள் சில பாடல்களே (புறத்திரட்டின்
வாயிலாகக்) கிடைத்துள்ளன.

     குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்த நீலகேசி உரை, குண்டலகேசிக்
காப்பியக் கதையைச் சுருக்கமாய்க் கூறி விளக்குகின்றது.*

     ஐஞ்சிறு காப்பியங்களுள், நாககுமார காவியம் மறைந்து விட்டது.

     காப்பியங்களுள், சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி நீலகேசி ஆகிய
மூன்றிற்கு மட்டுமே முற்காலத்தில் உரைகள் தோன்றியுள்ளன.

1. அரும்பதவுரையாசிரியர்

     ஊர் பேர் தெரியாத பண்டைய உரையாசிரியரைப் பழைய
உரையாசிரியர் என்று குறிப்பிடுவது, பிற்கால உரையாசிரியர்களின்
வழக்கமாகும். சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியுள்ள அடியார்க்கு நல்லார்
காலத்திலேயே இத்தகைய வழக்கம் இருந்திருக்கிறது. அடியார்க்கு நல்லாருக்கு
முன்னர்ச் சிலப்பதிகாரத்திற்கு ஊர் பேர் தெரியாத பழையவுரையாசிரியர்
ஒருவர் இருந்தார். அப் பழையவுரையாசிரியரின் ஊர்பேர் தெரியாததாலும்,
அவர் இயற்றிய உரை, பெரும்பாலும் அரிய சொற்களுக்குப் பொருள்
கூறுவதாய் இருப்பதாலும் அடியார்க்கு


 * பார்க்க, பிற்சேர்க்கை - 2.