பக்கம் எண் :

உரையாசிரியர்கள்450

கின்றது. பிறர் உரைகளை ஆங்காங்கே குறிப்பிட்டுச் செல்கின்றார் இவர்.

உரையின் இயல்பு

    அரும்பதவுரையாசிரியர் ஆராய்ச்சித் தெளிவும், ஆழ்ந்த புலமையும்
அமைதியான உள்ளமும், பண்பட்ட நல்லியல்பும், அரியஉழைப்பும்
கொண்டவர் என்பதை இவரது உரை உணர்த்துகின்றது. உலகியல்அறிவு
மிக்கவர் என்றும் உரை அறிவிக்கின்றது.

     இவரது உரை, நூல் முழுமைக்கும் உள்ளது. எல்லா இடங்களிலும்
அருஞ்சொற்பொருள் கூறுகின்றார். தேவையான இடங்களில் இலக்கணம்
காட்டுகின்றார். மிகச் சில இடங்களில் வினைமுடிபு காட்டுகின்றார்.
தொடர்களுக்குப் பொழிப்புரை கூறுகின்றார்.

     “அடியார்க்கு நல்லார் உரையில் காணப்படாத பல அரிய கருத்துகள்
இவ்வுரையால் விளங்குகின்றன. இவ்வுரையில் உள்ள முடிபுகளும் பொருளும்
இல்லையாயின், அடியார்க்கு நல்லாருடைய உரை இல்லாத பாகங்களுக்குப்
பொருள் காண்பது அரிது” என்பார் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்.

     அரும்பதவுரையாசிரியர் மங்கல வாழ்த்துப் பாடலில் (28.9)
கண்ணகியை முதலில் அறிமுகப்படுத்துவதற்குக் காரணம் கூறுகின்றார்.
“இவளை (கண்ணகியை) முன்கூறியது கதைக்கு நாயகியாதலின்” என்று
உரைக்கின்றார்.

     அரங்கேற்று காதை உரை மிக விரிவானது. அரிய விளக்கம் பல
கொண்டது.

     வழக்குரை காதையில் (80) ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’
என்ற அடிக்கு விளக்கம் எழுதும் போது ‘தந்தை தாய் முதலாயி னோரை
இழந்தார்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டலாம். இஃது அவ்வாறு
வாக்கானும் சொல்லல் ஆகாமையின், காட்டுவதுஇல்
 என்றாள்” என்று
உரைக்கின்றார்.

அடியார்க்கு நல்லாரும் அரும்பதவுரையாசிரியரும்

     அரும்பதவுரையாசிரியர் அமைத்துத் தந்த பாதையிலே அடியார்க்கு
நல்லார் செல்லுகின்றார். அரும்பதவுரையாசிரியர் அமைத்த கடைக் காலின்
மீதுதான் அடியார்க்கு நல்லார் கட்டிடம் எழுப்புகின்றார்.
அரும்பதவுரையாசிரியர் கூறும் விளக்கங்களை அடியார்க்குநல்லார்
விளக்காமல் விட்டுச் செல்லுதலும் உண்டு.