பக்கம் எண் :

உரையாசிரியர்கள்452

சிலம்புகள் எத்தனை? ஒன்றா? இரண்டா? மூன்றா? ஒன்றே ஆயின்,
உடைக்கப்பட்டது எந்தச் சிலம்பு?

     இக்காலத்தில் இந்த வினாக்களுக்குப் பல விடைகள் தோன்றியுள்ளன.

     இந்த வினாக்களுக்குத் தகுந்த விடை, அரும்பத உரையில் உள்ளது.

     கோவலனிடமிருந்து பொற்கொல்லன் வாங்கி, காவலர்களிடம் தந்த
கண்ணகி சிலம்பே பாண்டியன் அவையில் கண்ணகியால் உடைக்கப்பட்டது.

     அரும்பதவுரையாசிரியர் இதனை, “தட்டான் வாங்கி, கள்ளப்படி
செய்வார் கையிற் கொடுத்த பொற்சிலம்பு” என்று கூறுகின்றார்.

     இங்கே மற்றொரு வினா எழுவது இயற்கையே. கண்ணகி,
பாண்டியனைக் காண ஆயர்சேரியிலிருந்து சென்றபோது, கையில்
எடுத்துச்சென்ற சிலம்பு என்ன ஆயிற்று?

     இதற்கும் உரை, விடையளிக்கின்றது:

     “இராசா துஞ்சின பின்பு, கண்ணகி தன்

     கைச் சிலம்பை, தேவி முன்னே எறிந்தாள்”

     இச் செய்தி உண்மை என்பதை இளங்கோ அடிகளின் வாக்கினால்
அறியலாம்:

    செஞ்சிலம்பு எறிந்து தேவி முன்னர்
    வஞ்சினம் சாற்றிய மாபெரும் பத்தினி.       (காட்சி - 73, 74)

    அரும்பதவுரை இத்தகைய நுட்பான செய்திகள் பலவற்றை விளக்கிக்
கூறுகின்றது.

உரைநடை

    அரும்பதவுரையாசிரியரின் உரைநடைச் சிறப்புக்குப் பின்வரும் பகுதி நல்ல
சான்றாக உள்ளது:

     “வஞ்சி மூதூர் மணி மண்டபத்திடைத் தந்தையோடு இருந்துழி, அரசு
வீற்றிருக்கும் திருப்பொறி உண்டென்று ஒரு நிமித்திகன் சொல்ல, முன்னோனாகிய
செங்குட்டுவன் இருப்ப இவ்வாறு முறை பிறழக் கூறியது பொறாது குணவாயிற்
கோட்டத்துக் கடவுளர் முன்னர்த் துறந்திருந்த இளங்கோவடிகளுக்கு, கண்ணகி
வானவர் போற்றத் தன் கணவனோடு கூடியது கண்டு செங்குட்டுவனுக்கு உரைத்த
குறவர் வந்து, ‘எல்லாம் அறிந்தோய்! இதனை அறிந்தருள்’ எனக்கூறிப் போக,
பின்பு