செங்குட்டுவனைக் கண்டு அடிகளுழை வந்த சாத்தன், அது பட்டவாறு எல்லாம் கூற, அது கேட்டு, ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்பதூஉம், பத்தினி மகளிர் பெய்யெனப் பெய்யும் மழை என்பதூஉம், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் இக் கதையகத்து உண்மையின், அதனை யாம் ஒரு செய்யுளாகச் செய்வோம்’ என்று சாத்தன் சொல்ல, இம் முப்பது வகைத்தாகிய செய்யுளை இளங்ககோவடிகள் அருள, கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் என்க.” இப் பகுதி, ஒரே வாக்கியமாய் அமைந்து, பொருள் தெளிவுடன் சொல்லோவியமாய் விளங்குகின்றது. தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் இவரது உரைத்திறனைப் பின் வருமாறு போற்றுகின்றார்: “இதனை எழுதிய ஆசிரியர், அருஞ்சொற்களுக்குப் பொருள் உரைக்கும் நிலையிற் பதவுரையாகவும், இலக்கணக் குறிப்பும் மேற்கோளும் தந்து நூலின் பொருளை விரித்துரைக்கும் நிலையில் அகல வுரையாகவும், காப்பியத்தின் சொற்பொருள் நயங்களைச் சுருங்கச் சொல்லி விளக்குந் திறத்தில் நுட்பவுரையாகவும் நூலாசிரியரது உளக்கருத்தினை உய்த்துணர்ந்து நூலகத்து எஞ்சியுள்ள சொல்லையும் குறிப்பையும் வருவித்து உரைக்கும் திறத்தில் எச்ச வுரையாகவும் உள்ளது.” 2. அடியார்க்குநல்லார் அடியார்க்குநல்லார் என்ற இனிய பெயரையுடையவர், சிலப்பதிகாரத்திற்கு உரை இயற்றிய சான்றோர். இவர் அரும்பதவுரையாசிரியர்க்குப் பின்னர், உரை இயற்றியவர், இவருக்கு முன்னும் சிலர் சிலப்பதிகாரத்திற்கு உரை இயற்றி இருக்கலாம் என்று கருத இடமுண்டு. பிறர் கொண்ட பாடங்களையும் உரைகளையும் இவர் ஆங்காங்கே சுட்டிச் செல்கின்றார். இவரைப்பற்றி அறிய, சிறப்புப்பாயிரச் செய்யுள்கள் உதவுகின்றன. இவரைக் ‘காரும் தருவும் அனையான்’ என்றும், ‘நிரம்பையர் காவலன்’ என்றும் ஒருபாடல் கூறுகின்றது. இவர் புலமைச் செல்வராயும் கொடைவள்ளலாயும் விளங்கி இருக்க வேண்டும். ‘நிரம்பையர் காவலன்’ என்பதனால் அவ்வூர்க்கு உரிமையுடையவராக இவர் இருந்திருக்கலாம். “இவருக்கு நிரம்பையர் காவலன் என்னும் பெயர் ஊரால் வந்தது என்றும், நிரம்பை என்னும் ஊர் கொங்கு மண்டலத்தில் குறும்பு நாட்டில், பெருங்கதையின் ஆசிரியராகிய கொங்குவேளிர் |