நிலைச் செய்யுட்கும் காப்பியம் என்று பெயர் கூறுதலும் ஆசிரியர் கருத்தென வுணர்க.” சிலப்பதிகாரம், பெண்ணின் பெருமையை உலகிற்கு உணர்த்த எழுந்த பெருங்காப்பியம். நூலின் தொடக்கம் முதல் இறுதி வரை அக் காப்பியத்தில் கண்ணகியின் பெருமையே பேசப்படுகின்றது. மங்கல வாழ்த்துப் பாடலிலும் முதன் முதலில் கண்ணகியே அறிமுகப்படுத்தப்படுகின்றாள். பின்னரே கோவலன் சிறப்புக் கூறப்படுகின்றது. அடியார்க்கு நல்லார் காப்பியத்தின் உட்கருத்தை நன்றாக உணர்ந்து மங்கல வாழ்ந்ததுப் பாடலில் (56-9), ‘கண்ணகியை முற்கூறினார். பத்தினியை ஏத்துதல் உட்கோளாகலான்” என்று கூறுகின்றார். தமிழகத்தை முழுமையாக நோக்கி மூவேந்தர் நாட்டையும் ஆட்சியையும் உயர்வு தாழ்வின்று ஒப்பக்கருதி, தம் காப்பியத்தில் சிறப்பித்தவர் இளங்கோவடிகள். காப்பியம் இயற்றிய அடிகளின் நெஞ்சத்தை மிக நன்றாக உணர்ந்த அடியார்க்கு நல்லார் ஆய்ச்சியர் குரவையுள் (31) உள்வரிக் கூத்தினுள் முதலில் பாண்டியனையும் பின்னர்ச் சோழனையும் அதன்பின் சேரனையும் வாழ்த்துவதை (29-31) எண்ணுகின்றார். “இவற்றுள் சேரனை முற்கூறாது பாண்டியனை முற்கூறியது என்னை எனின் இது மதுரைக் காண்டம் ஆதலானும், இக் காப்பியம் செய்தவர் விழைவு வெறுப்பு அற்ற சேரமுனி ஆதலானும், முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது (பதிகம்-61) எனச் சாத்தர் கூறினமையானும் என்க” என்று இளங்கோவடிகளின் உள்ளத்தை அறிந்து போற்றி உரைக்கின்றார். கதை நிகழ்ச்சியும் கட்டுக் கோப்பும் சிலப்பதிகாரத்தில் கதை நிகழ்ச்சியில் சில இடங்கள் சிக்கலாக உள்ளன. மேம்போக்காகப் பார்க்கும்போது கட்டுக்கோப்பு இல்லாமல் இருப்பதுபோலத் தோன்றுகிறது. அவ்விடங்களில் அடியார்க்குநல்லார் தம் ஆராய்ச்சித் திறனை வெளிப்படுத்தி உரை கண்டுள்ளார். ஊர்காண் காதையில், கோவலன் மதுரையினுள் சென்று அந் நகரிலுள்ள வணிகரைக்கண்டு அவர்களிடம் உதவிபெறும் நோக்கத்துடன் கவுந்தியடிகளிடம் விடை பெறுகின்றான். இதனை, தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை உணர்த்தி யான்வருங் காறும் பாதக் காப்பினள் பைந்தொடி |