என்ற அடிகளில் மிகத்தெளிவாக இளங்கோவடிகள் உணர்த்துகின்றார். மேலும், கவுந்தியடிகள் கண்ணகியை மாதரியிடம் அடைக்கலமாகத் தரும்போது, மாதரி கேள்;இம் மடந்தைதன் கணவன் தாதையைக் கேட்கில் தன்குல வாணர் அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர் உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும் இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன் என்று கூறுகின்றார். ஆனால், மதுரை நகரினுள் சென்ற கோவலன் அந் நகரத்து வணிகர்களைச் சந்திக்கவில்லை; அங்கே தங்க எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை; நகரத்தின் பலவேறு நெடுந்தெருக்களைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடுகிறான். இவ்வாறு செய்ததற்குக் காரணம் எதுவும் கூறப்படவில்லை. இந்த முரண்பாட்டை அடியார்க்கு நல்லார் நினைத்துப் பார்க்கின்றார்; முன் பின் உள்ள நிகழ்ச்சிகளை இணைத்து நோக்குகின்றார். கோவலன் மதுரையில் தங்க எத்தகைய ஏற்பாடும் செய்யாமல் வந்ததை ஆராய்கின்றார். ஊர் காண் காதையின் இறுதியில், “இவற்றின் பந்தர் நிழலிலே திரிந்து, காவலனது பெரிய நகரினைக் கண்டு மகிழ்ச்சி எய்தலாலே பொருந்துழி யறிதலை மறந்து போந்தான் என்க” என்று எழுதுகின்றார். இளங்கோ அடிகள், காவலன் பேரூர் கண்டு மகிழ்வெய்திக் கோவலன் பெயர்ந்தனன் கொடிமதிற் புறத்தென் என்றே கூறுகின்றார். “பொருந்துழி யறிதலை மறந்து” என்று அடியார்க்குநல்லார் தாமே விளக்கம் சேர்த்துக் கொள்ளுகின்றனர். இவ்வாறு கூறாவிடின், கதை நிகழ்ச்சிகள் முரண்படும். கோவலன் ஊமையா?: சிலப்பதிகாரக் கதை நிகழ்ச்சியில் மற்றோர் இடத்தில் புதியதோர் சிக்கல் ஏற்படுகின்றது. கொலைக்களக் காதையில், பொற்கொல்லன் பாண்டிய மன்னன் ஏவிய காவலாளர்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு கோவலன் இருக்கும் இடத்திற்கு வருகின்றான்; கோவலனிடம், வலம்படு தானை மன்னன் ஏவ சிலம்பு காணிய வந்தோர் இவல் (158, 59) |