பக்கம் எண் :

உரையாசிரியர்கள்460

எனக் கூறுகின்றான்; கோவலனிடம் இருந்த சிலம்பைத் தன்னுடன்
வந்தவர்க்குக் காட்டுகிறான். கோவலனையும் சிலம்பையும் கண்ட “அருந்திறன்
மாக்கள்”.

    இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன்
    கொலைப்படு மகன் அலன்                       (162-3)

என்று கூறுகின்றனர். பின்னர்ப் பொற்கொல்லன் கள்வர்களின் திறனைப்
பலவாறு கூறிக் கதை ஒன்றையும் கட்டி, நெடுநேரம் பேசிக் காவலர்களின்
மனத்தை மாற்றுகிறான் (166-211). பொற்கொல்லன் பேச்சை ஏறத்தாழ
நாற்பத்தைந்து அடிகளில் இளங்கோ அடிகள் கூறுகின்றார்.

     இத்தகைய பேச்சும் நிகழ்ச்சியும் நிகழ்ந்தபோது கோவலன் ஏன்
ஊமையாய் இருந்தான்? மன்னனிடம் இருந்து சிலம்பு காணவந்தவரிடம்
தன்னைக் கள்வனென்று பொற்கொல்லன் பேசும் பொய்யுரைகளையும்
கேட்டுக் கோவலன் வாளா இருந்ததேன்? கோவலன் இங்கே பேசியிருந்தால்
என்ன? காவலர்களிடமும் பொற்கொல்லனிடமும், “நானா கள்வன்? இதுவா
திருட்டுச் சிலம்பு? வாருங்கள் மன்னனிடமே போகலாம்! அங்கே விளங்கும்
உண்மை” என்று வீறு கொண்டு நின்று பேசி இருந்தால் என்ன?
அவ்வாறெல்லாம் அவனால் பேச முடியாதா? இளங்கோ அடிகள்
இவ்விடத்தில் கோவலனை ஏன் பேசாத ஊமையாய்ப் படைத்துவிட்டார்?

     இப்படிப்பட்ட வினாக்கள் அடியார்க்கு நல்லார் உள்ளத்திலும்
எழுந்துள்ளன. அதனால்தான்,

    செய்வினைச் சிலம்பின் செய்தி எல்லாம்
    பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட       (16:160-61)

என்ற அடிகளுக்கு, “சிலம்பின் அருமை எல்லாம் கூறுவான் போலப்
பொய்மையைத் தொழிலாக உடைய கொல்லன் அவரை வேறாக
அழைத்துக் கோயிலில் (அரண்மனையில்) இருக்கின்ற தனிச்
சிலம்போடே பொருந்தச்
சொல்லிக்காட்ட” என்று பொருளும், “புரிந்து
எனவே அவனின் (கோவலனிடமிருந்து) நீங்கி என்பதும், உடன் காட்ட
எனவே அச் சிலம்போடு ஒரு தன்மையாக ஒப்புக் கூறி என்பதும்
கொள்ளப்பட்டன” என்று விளக்கம் தருகின்றார்.

     இவ்வாறு அடியார்க்கு நல்லார் உரை விளக்கம் கூறி இளங்கோ
அடிகள் செய்தியை எடுத்துரைத்துக் கதை நிகழ்ச்சியில் தோன்றும்
சிக்கலைவிடுவிக்கின்றார்.