நிகழ்ச்சியை இணைத்தல் கதை நிகழ்ச்சியை உற்றுநோக்கி உண்மை உணர்ந்து முன்னும் பின்னும் இணைத்துப் பார்த்தல் அடியார்க்குநல்லாரின் இயல்பு. புறஞ்சேரி இறுத்த காதையில், ...தென்ற லொடு பால்நிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய வேனில் திங்களும் வேண்டுதி என்றே பார்மகள் அயாஉயிர்த்து அடங்கிய பின்னர் (26-29) என்ற அடிகளுக்கு விளக்கம் எழுதும்போது, “இத்துணையும் இவள் (கண்ணகி) புணர்ச்சியின்பம் பெறாமைநோக்கி, பார்மகள் இரங்கிக் கூறினாள். என்னைப் புணர்ச்சியில்லாதவாறு எனின், மாதவியோடு புலந்து போதலானும், மதுரைக்குச் சேறற்கு ஒருப்பட்ட நெஞ்சினன் ஆதலானும், மேற் கவுந்தியடிகளுடன் வழிச்சேறலானும் யாண்டும் மெய்யுறல் மாத்திரமல்லது புணர்ச்சி இல்லென உணர்க” என்று உரைக்கின்றார். துன்பமாலையுள், “செங்கண் சிவப்ப அழுதாள்” (32) என்பதற்கு விளக்கம் கூறுகையில், “ஆண்டு (இந்திர-237 “கண்ணகி கருங்கணும்”) கண்ணகி கருங்கண் என்றவர் ஈண்டு செங்கண் என்றார், காலையில் தலையளியால் பிறந்த செவ்வி தோன்ற” என்கின்றார். இவ்விரு பகுதிகளும் ஒப்பிட்டு நோக்கத்தக்கவை. நிகழ்ச்சியும் காலமும் சிலப்பதிகாரக்கதை நிகழ்ச்சிக்குரிய காலத்தை ஆங்காங்கே தம் உரையில் அடியார்க்குநல்லார் சுட்டிச் செல்லுகின்றார். ஆண்டு, திங்கள், நாள் இவற்றைக் கணக்கிட்டுக் கூறுகின்றார். மனையறம்படுத்த காதை “யாண்டு சில கழிந்தன கண்ணகி தனக்கு” (89,90) என்று முடிகின்றது. அடியார்க்கு நல்லார், “கண்ணகிக்குச் சிலயாண்டு கழிந்தன. எனவே, மாதவிக்குப் பலயாண்டு கழிதலும் கொள்ளப் பட்டது” என்றும், “நாலீராண்டு நடந்ததற் பின்னர் (30:85) என்பதனை இருவர்க்கும் ஆக்கி மாதவிக்கு எட்டின் இறந்த பலயாண்டு சேறலின் கண்ணகிக்குச் சிலயாண்டு கழிந்தன எனப் பொருள் கூறலும் ஒன்று” என்று விளக்குகின்றார். பூம்புகார் நகரில் சித்திரை மாதத்தில் இந்திரவிழா நிகழ்தல் (இந்திர-64), மாதவியைப் பிரிந்து கோவலன் கண்ணகியிடம் வருதல், புகாருக்கும் மதுரைக்கும் உள்ள முப்பது காத |