பக்கம் எண் :

463ஆய்வு

கடவார் ஆகி, பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள் (10:154-5)
என்றமையானும், ஈண்டும் ‘அன்று உறைவிடத்து அல்கினர் அடங்கி
என்றமையானும் சிலநாள் சென்ற வழிச் செலவு ஒழிந்து ஒழிந்து ஆண்டு
இருந்து ஆறிச்சென்றமை உணர்த்தற்கு எனக் கொள்க” என்று உரைக்கின்றார்.

     ஆடித்திங்களில் வெள்ளிக்கிழமையன்று மதுரை எரிந்தது என்ற
குறிப்பை மனத்தில் கொண்டு, இவர் அதற்கேற்ப முன் நிகழ்ச்சிகளுக்குக்
காலம் கூறுகின்றார்.

     புறஞ்சேரி இருத்த காதையில்,

      வேனில் வீற்றிருந்த வேய்கரி கானத்து               (36)

என்ற அடியின் உரைவிளக்கமாக “ஆனித்திங்கள் கடை நாள் ஆகலின்
‘வீற்றிருந்த’ என்றார்’ என்று உரைக்கின்றார். ஊர் காண் காதையில்,

      குடகாற்று எறிந்து கொடிநுடங்கு மறுகில்

என்ற அடி உரையின் கீழ், “ஆடித் திங்கள் என்பது தோன்றக் குடகாற்றுக்
கூறினார்” என்கிறார்.

     மாதங்களையேயன்றிக் கதை நிகழ்ச்சிக்குரிய நாட்களையும் இவர்
குறிப்பிடுகின்றார். கொலைக்களக் காதையில், கண்ணகி உணவு சமைக்க
ஏற்பாடு செய்யப்படுவதைக் குறிப்பிடுகையில் (18-21) “இத்துணையும் கூறியது
இவர்கள் சென்ற அன்றிரவு செய்தனவும் மேற் செய்வனவும்’ என்றும், “இனி
மற்றை நாளைச் செய்தி கூறுகின்றார்” என்றும் கூறுகின்றார்.

நிகழ்ச்சியும் இடமும்

    கதைநிகழ்ச்சிக்குரிய இடங்களைப்பற்றியும் இவர் சிந்தித்துள்ளார்.
இந்திரவிழவூரெடுத்த காதையில் “வச்சிர நாடு” என்பதற்குச் (99) “சோணைக்
கரை” என்று பொருள் கூறுகின்றார். சோணை என்னும் ஆற்றங்கரையில்
இருந்த நாடு வச்சிர நாடாகும். காடுகாண் காதையில்,

    கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்
    அந்தில் அரங்கத்து அகன்பொழில்                    (6-7)

என்ற அடிகளில் குறிப்பிடும் அரங்கம் என்பது ‘திருவரங்கம்’ என்று
எழுதுகின்றார்.

காப்பிய உறுப்பினர் பண்பு

    காப்பிய மாந்தர்களின் பண்பையும் அடியார்க்குநல்லார் குறிப்பிடுகின்றார்.