பொருள்தேடச் செல்லும் தலைமகன் தன்னுடன் மனைவியை அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை. கோவலன் அவ்வழக்கத்திற்கு மாறாகக் கண்ணகியுடன் மதுரை செல்கின்றான். சிறந்த குடியில் பிறந்தவர் இவ்வாறு செய்யார் என்று கோவலன் உணர்ந்து வருந்துவதாய் அடியார்க்குநல்லார் குறிப்பிடுகின்றார். ஊர்காண் காதையில் (17) கோவலன் கவுந்தியை வணங்கி, “நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி... சிறுமையுற்றேன்!” என்று வருந்துகின்றான். இந்த அடிக்கு விளக்கம் கூறும்போது, “ஒழுக்கமுடைய விழுக்குடிப் பிறந்தோர் நாணுடை மகளிரொடு நீணெறிச் செல்லார் என்பது கருதி, ‘நெறியின் நீங்கியோர் நீர்மையேனாகி’ என்றான் என உணர்க” என்று உரைக்கின்றார். கவுந்தியடிகளுக்குச் சாபம் இடும் தவவலிமை இருந்ததே தவிர, மக்களுக்கு எதிர்காலத்தில் வர இருக்கும் துன்பத்தை முன்னரே உணர்ந்துகூறும் ஆற்றல் இல்லை என்பதை அடியார்க்கு நல்லார் உணர்த்துகின்றார். நாடு காண் காதையில், ‘ஈங்கு ஒழிக என ஒழியீர்’ (55) என்ற அடிக்கு விளக்கமாக, “ஒழிக என ஒழியீர் என்பதற்கு, இவர்க்கு எதிர்வது அறிந்து கூறினார் எனின், ஒரு பொழுதிற்கு இத்துணை ஓம்படை எல்லாம் கூறவேண்டா ஆகலானும் இவர்க்குத் தவப்பயனாலே கபித்தலன்றி, காலவுணர்ச்சி இன்மை உணர்க” என்று சிறப்பாக உரைக்கின்றார். மேலும் கவுந்தியடிகள், மனைவியை அழைத்துக் கொண்டு கணவன் பொருள்தேடச் செல்லுதலை விரும்பாதவர் என்றும், பண்டைய வழக்கத்தைப் புறக்கணிக்க விரும்பாதவர் என்றும் இவர் கருதுகின்றார். நாடுகாண் காதையில் (35), “உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர்” என்று கவுந்தியடிகள் கோவலனுக்குக் கூறும் அறிவுரைக்கு அடியார்க்கு நல்லார், “குடிப் பிறப்பிற்கும் இவளை (கண்ணகியை) ஒருங்குகொண்டு சேறல் ஏலாது ஆதலின் இனிச் செலவை ஒழிமின் என்று யாம் ஒழிப்பவும் ஒழிக்கின்றிலீர்” என்று பொருள் உரைக்கின்றார். கோவலன் கொலைக்குக் காரணமாக இருந்த பாண்டியன் கொடுங்கோலன் அல்லன் என்பதை அடியார்க்கு நல்லார் “என் கோதைதன் காற்சிலம்பு அடிபட்ட கள்வன் கையதாயின் கொன்று கொணர்க எனினும் தன்கண் (பாண்டிய மன்னனிடம்) கொடுங்கோன்மை இன்மை உணர்க” (கொலைக்-153) என்று கூறுகின்றார். கனாத்திறமுரைத்த காதையில் ‘சிலம்புள கொண்ம்’ என்பதற்கு (73) விளக்கமாகப் பின்வருமாறு கூறிக் கண்ணகியின் உயர்பண்பை வெளிப்படுத்துகின்றார்: “சிலம்புள என்றாள், இவை |