பக்கம் எண் :

465ஆய்வு

ஒழிந்த கலன் எல்லாம் தொலைதலால், இவை அணியாதிருத்தலின்
அவனறியானாகக் கருதினும் அவன் தளர்ச்சி கூறுதலால், தான் இவையுண்மை
நினைந்து கூறினாள் என்க. புலந்து கூறினாள் எனில் கற்பின் தன்மை
அன்றாம்”

பிறர்உரை சுட்டல்

    அடியார்க்குநல்லார் தமக்குமுன் இருந்த உரைகளையும் கருத்துகளையும்
தேவையான இடங்களில் சுட்டுகின்றார்.

     இந்திரவிழவூரெடுத்த காதையில் (157), “இனி, ‘அவைக் களத்தார்
ஐந்து’ (157-அரும்பதவுரை) எனக்காட்டுவர் அரும்பதவுரையாசிரியர்” என்று
குறிப்பிடுகின்றார். துன்பமாலையுள் (2-7) “முதுமகள் போயினாளுடைய
சாயலாள் அரவங்கேட்டு வந்து அவ்விடத்து நின்றாள் உளள் என ஐயை
மேல் ஏற்று வாருமுளர்” என்கிறார். இன்னும் வேறு சில இடங்களில் பிறர்
கொண்ட பாடத்தையும் பொருளையும் சுட்டிச் செல்கின்றார்.

உரைநடைச் சிறப்பு

    அடியார்க்குநல்லார் உரை, பல இடங்களில் ஓசை இன்பம் பயக்கும்
சிறந்த கவிதையோல உள்ளது. பதிகத்தின் உரையில் இளங்கோ அடிகள்
துறவுபூண்ட வரலாற்றினைக் கவிதைச் சுவை சொட்டச் சொட்ட
எழுதுகின்றார். அத்தகைய இடங்கள் இன்னும் பல இவர் உரையில் உள்ளன.
சான்றுக்கு ஓரிடத்தைக் காண்போம்.

     ‘ஒழுக்கம் உடைய விழுக்குடிப் பிறந்தோர் நாணுடை மகளிரொடு
நீணெறிச் செல்லார்’ (ஊர்காண்-17) என்று ஓசை நயம் தோன்ற எழுதுகின்றார்
அவ்வுரைப் பகுதியை,

    ஒழுக்கம் உடைய விழுக்குடிப் பிறந்தோர்
    நாணுடை மகளிரொடு நீணெறிச் செல்லார்

என அகவாற்பாவின் ஈரடியாக அமைக்கலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த
உரைப்பகுதி பல இடங்களில் உள்ளன.

பருந்தும் நிழலும்

     அடியார்க்குநல்லார், பருந்தும் நிழலும் எனப் பாவும் உரையும்
பொருந்த அமைத்தவர். மூலத்தோடு உரை நன்கு பொருந்தி வருவதைக்
கீழே வரும் பகுதிகள் உணர்த்தும்.

    நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்
    பால்விரிந்து அகலாது படிந்தது போல
    ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
    பாயற் பள்ளிப் பலர்தொழுது ஏத்த