விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித் திருஅமர் மார்பன் கிடந்த வண்ணமும் (காடுகாண் - 35-40) ‘நீலமேகம் ஓங்கிய பொன்மலைமீதே பக்கங்களில் விரிந்து மிகாமல் ஒக்கப் படிந்ததுண்டாகில் அதனையொப்ப, தனது படம் விரித்து எழுந்த ஆயிரம் தலையையும் கிட்டுதற்கரிய திறலையும் உடைய பாம்பணைப் பள்ளிமீதே தேவர்கள் பலரும் தொழுது ஏத்தத் திரைவிரியும் காவிரியாற் றிடைக்குறையிலே திருமகள் பொருந்தித் திருமார்பையுடையோன் கிடந்த கோலம்”. பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் திங்கள் முகிலொடும் சேண்நிலம் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை எங்கணாஅ என்னா இனைந்தேங்கி மாழ்குவாள் (துன்பமாலை-30-33) ‘தனது ஆற்றாமையான் வசமிழந்து நிலத்தினின்றும் எழுந்து மறித்தும் விழுந்து கிடக்கின்றவள் எங்ஙனம் வீழ்ந்து கிடந்தாள் எனின் - கதிரையுடைய திங்கள் பொழியக் கால்கொண்டு வீழ்ந்த புயலோடு பெரிய நிலத்தில் வீழ்தலைக் கொண்டதென விழுந்தாள்; விழுந்தவள் தன் கணவன் முன்னர் வருகெனப் பொருந்துதலாற் செவ்வரிபாய்ந்த கண் கலங்கிச் சிவக்கும்படி தன் கொழுநனை ‘நீ எவ்விடத்தாய்தான்’ என்னா வருந்திப் பொருமி மயங்கி யாவும் தோன்றா என்று அழுதாள்” நயமும் விளக்கமும் அடியார்க்குநல்லார் சில அடிகளுக்குப் பொருள் விளக்கம் கூறி நயம் கூறுகின்றார். ...என் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே ஈதொன்று என்பதற்கு, ‘என் காற்சிலம்பு என்றாள் - தான் அரசன்; யான் ஒரு வணிகன் மனைவி, என் காலணியின் ஒன்று பெற்ற விலை தாராமைக் கள்வன் என்று பெயரிட்டுக் கொன்றார்களே என்று. இஃதோர் அநியாயம் இருந்தபடி என்ன என்று தெளிந்து கூறினாள். கொன்றாரே எனப் பன்மை கூறினாள்; அரசனோடு அமைச்சரையும் கருதி’ என்று நயம் கூறுகின்றார். துன்பமாலையில் நெடுமால் (4) என்ற சொல்லுக்கு ‘அந்தர வானத்து எம்பெருமான்’ என்று பொருள் உரைக்கின்றார். ஆய்ச்சியர் குரவையில் முந்நீர் (31) என்பதற்குத் தரும் விளக்கம் போற்றத்தக்கதாய் உள்ளது: |