பக்கம் எண் :

467ஆய்வு

     “முந்நீர்-கடல், ஆகுபெயர். ஆற்று நீர், ஊற்று நீர், மேல் நீர் என
இவை என்பவர்க்கு அற்றன்று; ஆற்றுநீர் மேல்நீர் ஆகலானும் இவ்விரண்டும்
இல்வழி ஊற்றுநீரும் இன்றாம் ஆதலானும் இவற்றை முந்நீர் என்றல்
பொருந்திய தன்று.

     “முதியநீர் எனின், நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் (குறள்-17)
என்பதனால் அதுவும் மேல் நீரின்றி அமையாமையின் ஆகாது:

     “ஆனால், முந்நீர்க்குப் பொருள்யாதோ எனின், முச்செய்கை யுடைய
நீர் முந்நீர் என்பது; முச்செய்கையாவன மண்ணைப் படைத்தலும் மண்ணை
அழித்தலும் மண்ணைக் காத்தலும் ஆம்”.

     கொலைக்களக் காதையில் வரும் ‘குமரி வாழை’ என்ற சொல்லுக்கு
விளக்கம் எழுதுகையில், “குமரி வாழை - இது பெயரின் வந்த சமாதி
என்னும் அலங்காரம்” என்கிறார். சமாதி என்பதைத் தண்டியலங்காரம்,

    உரிய பொருளன்றி ஒப்புடைப் பொருள்மேல்
    தரும்வினை புணர்ப்பது சமாதி யாகும்
                                       (தண்டி - 25)

என்று கூறி வினைபற்றி வருவது என்று உரைக்கின்றது. பெயர் பற்றியும்
வரும் என்கிறார் அடியார்க்குநல்லார்.

     கனாத்திறம் உரைத்த காதையில் வரும் ‘இடுதேள் இடுதல்’ (48)
என்பதற்கு, “தேளிடப் படுபவர் காணாமே தேளல்லாதது ஒன்றை மறையக்
கொடுவந்து மேலே இட்டு அவரைக் கலங்கப் பண்ணுதல்; பாய்ச்சுத் தேள்
என்பாரும் உளர்” என்று விளக்கம் உரைக்கின்றார்.

     வேனிற் காதையில் “கடல்விளையாட்டினுள் கோவலன் ஊட” (14, 15)
என்பதற்கு, “விளையாட்டினுள் என்றது விளையாட்டுப் பூசல் வினையாயிற்று
என்றும் வழக்குப் பற்றி” என்று பழமொழி ஒன்றினை நினைவூட்டுகின்றார்.

     புறஞ்சேரி இறுத்த காதையில், “இடிதரும் உளியம்” (32) என்பதற்கு
“கரடி இடிக்கும்” என்று பொருள் உரைத்து, “இடிப்பு-அதிர்ப்பு; உற் டட்ட
டட்டெனப் பற்பறை கொட்டல்” என்று கரடியின் ஒலியைக் கூறுகின்றார்.

பலபொருள் கூறுதல்

    சில வரிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களையும்
அடியார்க்குநல்லார் தருகின்றார். சிலேடையாக அமைந்தவற்றையும்
தெளிவுபடுத்துகின்றார்.