வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் வாளை மீனினது அங்காத்த வாயை வணங்குதலுறுவிக்கும் நெளி (கடலாடு - 94). ‘பட்டினி நோன்பிகள் - இரண்டு உவாவும் அட்டமியும் முட்டுப்பாடும் பட்டினி விட்டுண்ணும் விரதிகள். சிறு குரங்கு - மெலிந்த குரங்கு. கடைநாள் - மரணம்.’ (அடைக்கல-163,91) ‘கோளிப்பாகல்-வெளிப்படை: கோளி - பூவாது காய்க்கும் மரம். பாகல்-பலா (கொலைக்கள-24). “வறுமொழியாளர்-பயனில கூறுவோர்; வம்பப் பரத்தர் - புதிய காம நுகர்ச்சியை விரும்பும் காமுகர்; பரத்தையை நுகர்வானும் பரத்தன். குறுமொழி-சிறுசொல் ஆவது பிறரை இகழ்ந்து கூறுதல். நெடுநகை புக்கு - வெடிச் சிரிப்புக்கு உட்பட்டு.” (கொலைக்கள-63-70). “சுடு நோக்கு - சுடுவது போலவும் நோக்கு: என்றது கொள்ளிக் கண்” (இந்திர-84). மாறுபட்ட கருத்து அடியார்க்கு நல்லார் சிகண்டி என்பவரை அகத்திய முனிவரின் மாணவர் என்று உரைப்பாயிரத்தில் குறிப்பிடுகின்றார். ‘குறு முனிபால் கேட்ட மாணாக்கர் பன்னிருவருள் சிகண்டி என்னும் அருந்தவமுனி’ என்று கூறுகின்றார். சிலர் சிகண்டியை அகத்தியர் மாணவராகக் கொள்ளவில்லை தொல்காப்பியன், அதங்கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகன், வாய்ப்பியன், பனம்பரானார், கழாரம்பர், அவிநயன், காக்கை பாடினியார், நற்றத்தன், வாமனன் ஆகிய பன்னிருவரை அகத்தியர் மாணவர் என்பர். ‘போற்றி’ என்ற சொல்லுக்குப் பலர் பலவிதமாய் இலக்கணம் கூறுகின்றனர். அடியார்க்கு நல்லார் இகரஈற்று வியங்கோளாகக் கொண்டு ‘போற்றுவாயாக’ என்று பொருள் கூறுகின்றார். தனிவெண்பாக்களும் உரையும் சிலப்பதிகாரத்தில் உள்ள சில காதைகளின் கீழே தனி வெண்பாக்கள் (ஒன்றோ இரண்டோ) இடம் பெற்றுள்ளன. இவற்றை இயற்றியவர் இளங்கோ அடிகளே என்று சிலரும், பின்னால் சிலப்பதிகாரத்தைக் கற்றவர்கள் எழுதிச் சேர்த்தவை என்று சிலரும் கூறுவர். |