பக்கம் எண் :

475ஆய்வு

கடலாடு காதையில் ஒப்பனை வகைகளை விரித்துரைக்கின்றார். ஆடல்
பாடல்களின் இலக்கணமும் இசைக்கருவிகளின் அமைப்பும் கூறுகின்றார்.

     இசைக்கலை நுணுக்கங்கள் நிறைந்த கானல் வரிக்கு அடியார்க்குநல்லார்
உரை இல்லாமை தமிழ்க்கலை உலகிற்குப் பெரிய இழப்பேயாகும்.

     வேனிற்காதை யுரையில் ஆடற் கலைகளுக்கு விளக்கங் கூறுகின்றார்.
ஊர்காண் காதையில் நவமணிகளைப் பற்றிய இலக்கணங்களை உரைக்கின்றார்.

     ஆய்ச்சியர் குரவை உரையில் குரவைக் கூத்திற்கு நல்ல விளக்கம்
தருகின்றார்.

     சமண சமயக்கொள்கை இடம் பெறும் இடங்களில் அச் சமய நூல்களை
நன்கு அறிந்து உரை எழுகின்றார். ‘பட்டினி நோன்பிகள்’ என்பதற்கு
இவர் கூறும் விளக்கம் இதற்கு ஒரு சான்றாகும் (அடைக்கல 163-91).
நாடுகாண்காதையில் (81-5), “நமது தரிசனத்து (சாத்திர நூல்களில்)
கடியப்பட்ட வாற்றால் தேனுண்டலைப் பரிகரிக்க என்றதாம். எனவே,
ஊனையும் உடன் கூறிற்றாம். மேலும், இவ்வாறு வருவன கொள்க” என்று
உரைக்கின்றார்.

3. சமய திவாகர வாமன முனிவர்

     சிறுகாப்பியங்கள் ஐந்தனுள் ஒன்றான நீலகேசிக்கு உரை இயற்றியவர்
சமய திவாகர வாமன முனிவர். நீலகேசி சைன சமய நூல்.

     நீலகேசிக்குச் சமய திவாகர வாமன முனிவர் இயற்றிய விருத்தியுரை,
‘நீலகேசி விருத்தி சமய திவாகரம்’ எனப்படும். வாமன முனிவரின் பிம்பம்
சைன காஞ்சியில் உள்ளது.

     இவரது உரை சிவஞான சித்தியார் (பர பக்கம்) உரையில்
ஞானப்பிரகாசரால் மேற்கோள் காட்டப்படுகின்றது.

     நீலகேசியின் உரைச் சிறப்பை,

     மெய்ந்நூல் நெறியை விளக்கி விளங்காப் பிடகமுதற்
     பொய்ந்நூல் இருள்களைப் போகத் துரந்தது பூதலத்தில்
     எந்நூலும் வல்லவர் ஏத்தச் சமயத் திறைவன்கண்ட
     செந்நீல கேசி விருத்தி சமய திவாகரமே

என்ற பாடலும்,