அருகன் திருவறத் தன்புசெய் வாரும் அழிவழக்காற் பெருகும் திருநெறிப் பீடழிப் பாரும்இப் பேருலகிற் பொருவின்றி நின்ற தமிழ்ப்புல வோர்க்குப் பொருளைஎல்லாம் திரிவின்றிக் காட்டும் சமய திவாகரம் சேவிக்கவே என்ற பாடலும் உணர்த்தும். மணிப்பிரவாள நடையாசிரியர்களைப்போல இவர் மிகுதியாக வடசொற்களைக் கலந்து உரை எழுதுகின்றார். சைன சமயக் கருத்துக்களை நன்கு விளக்குகின்றார். ஏனைய பௌத்த, இந்து சமயங்களின் கருத்தையும் நன்கு அறிந்துள்ளார். தம் சமயக் கருத்துக்களை மறுக்கும் பிற சமயங்களை மறுக்கும் திறன் இவரிடம் உண்டு. குண்டலகேசியிலிருந்து கணக்கற்ற மேற்கோள்களைக் காட்டுகின்றார். அக் காப்பியத்தின் கதையைச் சுருக்கமாகக் கூறுகின்றார். இவர் உரையில் அரிய சொற்களையும் மறைந்துபோன தமிழ் நூல்களைப் பற்றிய குறிப்புகளையும் மிகுதியாகக் காணலாம். |