பக்கம் எண் :

477ஆய்வு

8

சமய நூல் உரையாசிரியர்கள்


 

1. நாலாயிர திவ்வியப் பிரபந்த வியாக்கயானங்கள்

    தமிழிலக்கிய உலகத்தில்-இடைக்காலத்தில் செந்தமிழை வளர்த்துச்
செழிக்கச்செய்த பெருமை ஆழ்வார்களுக்கு உரியது. இலக்கியச் சுவை
முதிர்ந்த வளமான கவிதைக் கனிகளை நல்கித் தமிழிலக்கியத்திற்கு
அளப்பருந்தொண்டுகளை அவர்கள் செய்திருக்கிறார்கள். ஆழ்வார்கள்
வழிபட்ட கண்ணனைத் தமிழ்மொழியின் மீது தணியாத காதல் கொண்டவன்
என்றும், தமிழ்க் கவிதை அமுதம் உண்டு திளைத்தவன் என்றும்
பெரியோர்கள் போற்றிப் புகழ்வர். ஆழ்வார்களின் பாமாலைகள்
அனைத்தையும் கண்ணன் மிக விரும்பி ஏற்பதாய்க் காலந்தோறும்
சான்றோர்கள் நம்பிவருகின்றனர். திருமாலையும் தமிழையும்
தொடர்புபடுத்தித் தோன்றிய கதைகள் சில உள்ளன.

     அருட்பெருங் கவிஞராகிய குமரகுருபரர்,

     பழமறைகள் முறையிடப் பைந்தமிழின் பின்சென்ற
     பச்சைப் பசுங் கொண்டலே

என்று திருமாலை அழைக்கின்றார். கம்பர் இயற்றிய சடகோபர் அந்தாதி,

     கவிப்பா அமுதம் இசையின் கறியொடு
     கண்ணற்கு உண்ணக் குவிப்பான்

என்று நம்மாழ்வாரைப் பாராட்டுகின்றது. உலகளந்த மாயவன்
கோயில்கொண்டு நிற்கும் எழில்மலையாம் திருவேங்கட மாமலையை,

     ஆழ்வார்கள் செந்தமிழை ஆதரித்த வேங்கடம்

என்று பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் புகழ்கின்றார்.