பக்கம் எண் :

479ஆய்வு

    சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்கு டந்தை
    ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்! கண்டேன் எம்மானே!

இதனைத் தொடர்ந்து பத்துப்பாடல்களைப் பாடி முடித்துப் பதினோராம்
பாடலின் இறுதியில்,

    குருகூர்ச் சடகோபன்
    குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
    மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே

என்ற அடிகளைப் பாடி முடித்தனர்.

     இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நாதமுனி வியப்பில்
மூழ்கினார். பாட்டுக்கு நெஞ்சைப் பறிகொடுத்த இவர், “குருகூர்ச் சடகோபன்
யார்? அவர் குழலின் மலியச் சொன்ன ஒரு ஆயிரம் பாடல்கள் யாவை?”
என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்.

     “ஆரா அமுதே” என்று பாடிய அடியவர்களை நோக்கி, “உங்களுக்குச்
சடகோபரின் ஆயிரம் பாடல்களும் தெரியுமா?” என்றார். அவர்கள் தாம்
அறிந்தவை பத்துப் பாடல்களே என்று கூறிச் சென்று விட்டனர்.

     அன்று முதல் நாதமுனிகள் சடகோபரின் ஆயிரம் பாடல்களையும்
தேடத் தொடங்கி விட்டார். நம்மாழ்வாரின் பிறப்பிடமான ஆழ்வார்
திருநகரிக்குச் சென்று பராங்குச தாசரைச் சந்தித்தார். அவர்
மதுரகவியாழ்வாரின் சீடர். அவர் துணையால் ஆழ்வார்களின் பாடல்களை
எல்லாம் அறிந்து தொகுத்தார். நாதமுனி தேடிச் சென்றது ஓர் ஆயிரம்
பாடல்களை. ஆனால், அவருக்குக் கிடைத்தவையோ ஏறத்தாழ நாயிரம்
பாடல்கள்.

     ‘நாலாயிரம் ’ பெற்ற நாதமுனிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே
இல்லை! பின்னர், அவற்றைப் பாகுபாடு செய்து இயலும் இசையுமாக
ஓதிவருமாறு தன் மருமக்கள் இருவருக்கும் பணித்தார். இருவரும் மேலை
அகத்து ஆழ்வான் என்றும் கீழைஅகத்து ஆழ்வான் என்றும் பெயர்
பெற்றனர்.

     நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கள் இசையாய் இசைக்கப்பட்டு்ம் இயலாய்
ஓதப்பட்டும் நாடெங்கும் பரவின. பெருமாள் கோயில் திருவிழாக்கள் தேர்றும்
ஒலிக்கத் தொடங்கின.

     வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சியை, பின் பழகிய ஜீயர்
இயற்றிய ‘குருபரம்பரா ப்ரபாவம்’ என்னும் மணிப்பிரவாள நூல் விரிவாகக்
கூறுகின்றது. *


* பார்க்க : பிற்சேர்க்கை - 3