பக்கம் எண் :

481ஆய்வு

உரைகள்

    ஆழ்வார்களின் பாடல்களாகிய திவ்வியப் பிரபந்தத்தை வைணவர்கள்
தங்கள் வேதம் என்று கருதினர். தென்கலை வைணவம் ஆழ்வார்களின்
பாடல்களையே உயிர் என்று கொண்டு வளர்ந்து வந்தது. இப்பாடலுக்கு மரபு
நிலை தவறாமல் இராமாநுசர் காலத்திலிருந்து பல உரைகள் காலந்தோறும்
தோன்றின. இராமாநுசர் தம் விசிட்டாத்துவைதக் கொள்கையை, உருப்படுத்த
ஆழ்வார்களின் பாடல்களை அடிப்படையாகக் கொண்டார். அப்பாடல்களுக்கு
அவர் அழகான விளக்கவுரைகள் கூறினார். அவருக்குப் பின் பல வைணவப்
பெரியோர்கள் தோன்றி ஆழ்வார்களின் பாடல்களுக்குப் பொருள் கூறி
விளக்குவதை ஒரு பெருங்கலையாக வளர்த்து வந்தனர். அவர்கள்
அனைவரும்,

                                  -தேர்த்தெழுதி
             வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
              பூசித்தும் போக்கினேன் போது

என்ற சான்றோரின் கொள்கையைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக்
கொண்டவர்கள்.

உரைகளின் சிறப்பு

    ஆழ்வார்களின் பாடலுக்கு உரை இயற்றிய வைணவப் பெரியோர்கள்
தாம் கற்ற  கலைகள் அனைத்தையும் தம் உரைகளில் வழங்கிச்
சென்றுள்ளனர். அப் பெரியவர்களின் இதய ஒலிகள் பலப்பல வகையாய்
உரைகளின் வாயிலாக வெளிப்படுகின்றன. பாடல்களின் ஆழ்ந்த
பொருள்களை மிக்க நயம்படப் புலப்படுத்தி எழுதியுள்ளார். மிக அரிய
செய்திகளும் விளக்கங்களும், நுண்கலைச் சொற்களும் உரைகளில் பொதிந்து
கிடக்கின்றன. இவ்வுரைகள் தனி இலக்கியமாகவும், வைண சமய தத்துவ
விளக்கமாகவும் போற்றப்படுகின்றன. பிற்காலத்தில் வைணவர்கள்
ஆழ்வார்களின் பாடல்களைவிட, உரைவிளக்கங்களையே சிறந்தவையாகக்
கருதிப் பின்பற்றினர்; விளக்கம் கூறிச் சமயக் கருத்துக்களைப் பரப்ப
உரைகளையே ஏற்ற சான்றுகளாகக் கொண்டனர்.

     திவ்வியப் பிரபந்த உரையாசிரியர்களின் சிறப்பை டாக்டர் உ.வே.
சாமிநாத ஐயர், “அவர்களுடைய உரையில் ஒரு பாடலுக்கு உரை கேட்டு
விட்டால் மனம் வேறு ஒன்றில் செல்லாது” என்று கூறிப்
புலப்படுத்துகின்றார்.


1. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், பக்கம் 162.