ஐயரின் நண்பர்களில் ஒருவரான தியாகராச செட்டியார், “வியாக்கியானத்தில் எவ்வளவு இரகசியங்கள் வெளிப்படுகின்றன. திவ்வியப் பிரபந்தத்தால் வியாக்கியானங்களுக்குப் பெருமையா? வியாக்கியானங்களால் அப் பிரபந்தங்களுக்குப் பெருமையா? என்று எண்ணும்படியல்லவா அவை இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.1 வியாக்கியானங்களில், வைணவ சமயத்தின் உயிர் நிலைக் கோட்பாடு, வழிவழியாகவந்த மரபுநிலை, திருமாலின் அவதார மாண்புகள், விசிட்டாத்துவைதத்தின் தத்துவ நுட்பம் ஆகியவை விளக்கப்படுகின்றன. வடமொழியில் உள்ள வேதம், உபநிடதம், புராணம், இதிகாசம் முதலியவற்றிலிருந்து கணக்கற்ற மேற்கோள்களைக் காட்டிப் பல கருத்துகள் விளக்கப்படுகின்றன. ஆழ்வார் பாடல்களின் கருத்தையும் அவற்றின் உள்ளுறைக் கருத்தையும் சமய நோக்குடன் ஆராய்ந்து தம் நுண்ணறிவு தோன்ற உரையாசிரியர்கள் விரித்துரைக்கின்றனர். வால்மீகி இராமாயணத்தின் கதைப்போக்கையும் பொருளையும் சிறப்புடன் பல இடங்களில் எடுத்துக்காட்டி அந்நூலை வைணவ சமயத்திற்கு ஒரு சிறந்த பிரமாண நூலாகவே காட்டியுள்ளனர்; அதன் மூலமாகத் தமக்கு உள்ள படைப்புத்திறனையும் வளமான கற்பனை ஆற்றலையும் புலப்படுத்தியுள்ளனர். ஆழ்வார்களின் பாடல்களில் தோய்ந்து அவர்கள் கூறும் இராமன் கதையிலும் திருமாலின் அவதாரக் கதையிலும் ஈடுபட்டுள்ளனர்; விஷ்ணு புராணம், பாகவதம் ஆகியவற்றிலும் மூழ்கி நனைந்திருக்கின்றனர். இவை எல்லாம் வியாக்கியான உரையாசிரியர்களின் சிந்தனையை வளர்த்துள்ளன; படைக்கும் திறனைப் பெருக்கியுள்ளன. நடையும் மொழியும் வியாக்கியானங்கள் பேச்சு நடையில் அமைந்துள்ளன. கொச்சை மொழிகள் விரவியுள்ளன. இவற்றிலும் ஒருவகை அழகும் ஆற்றலும் வெளிப்படுகின்றன. கணக்கற்ற பழமொழிகள், வகைவகையான மரபுத் தொடர்கள், நல்ல நல்ல நாட்டுப்புறக் கதைகள், சுவையான பழக்க வழக்கங்கள், வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் ஆகியவை வியாக்கியானங்களில் நிரம்பியுள்ளன. மணிப்பிரவாள நடை வெண்ணிற முத்துமணிகளையும் செம்பவளங்களையும் கலந்து முத்தும் பவளமும் ஒன்றன்பின் ஒன்று வருமாறு அமைத்து மாலை கட்டுவதுபோல, வடமொழிச் சொற்களைத் தமிழ்மொழி 1. வித்துவான் தியாகராச செட்டியார் பக்கம் - 145. டாக்டர் உ.வே.சா. |