பக்கம் எண் :

483ஆய்வு

யுடன் இடையிடையே கலந்து எழுதும் இலக்கிய நடை மணிப்பிரவாள
நடை என்று பெயர் பெற்றது. இருவேறு தனி இயல்புகளை உடைய இரு
மொழிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் பிறந்ததே இந் நடையாகும்.
மணிப்பிரவாளம் என்ற தொடரில் உள்ள மணி முத்தையும், பிரவாளம்
பவளத்தையும் குறிக்கும். தமிழ், வடமொழி இரண்டனுள் எது முத்து, எது
பவளம் என்ற வினாவை எழுப்பி விடை காண்பது வீண் வேலையாகும்.
முத்து, பவளம் இரண்டும் விலையுயர்ந்த பொருள்களே வடமொழி, தமிழ்
இரண்டையும் சிறப்பாகக் கருதியவர்களே மணிப் பிரவாள நடையைத்
தோற்றுவித்தனர்.

     மணிப்பிரவாள நடையில், வட சொற்களும் தொடர் மொழிகளும்
தமிழுடன் விரவிவரும். தமிழில் உள்ள இடைச் சொற்களும் வினைமுற்று
எச்சங்களும் வந்து கலக்கும். வடமொழி வினைச்சொற்களும் வந்து வந்து
சேரும். வடமொழிப் பெயர்ச்சொற்கள் வடமொழி வேற்றுமை உருபேற்று
வழங்கும். பிராகிருதமொழிச் சொற்களும் இடம் பெறும்.

தோற்றமும் வளர்ச்சியும்

    கி.பி. 300ஆம் ஆண்டிற்குப்பிறகு தமிழகத்தில் பல்லவர்களின் ஆட்சி
வேரூன்றியது. பல்லவ மன்னர்கள் காஞ்சி மாநகரைக் கைப்பற்றினர். தம்
ஆட்சியை மெல்ல மெல்லத் தெற்கே பரப்பினர். அவர்களால் வடமொழிக்கு
ஏற்றம் பிறந்தது. சமண சமயத்திற்கு வளர்ச்சி ஏற்பட்டது.

     சமண சமயத்தைப் பரப்பும் நோக்கத்துடன் வடக்கே இருந்து பல
சமணத்துறவிகள் தமிழகத்திற்கு வந்தனர். அக்காலத்தில் சமண சமய நூல்கள்
எல்லாம் சமஸ்கிருதத்திலும் பிராகிருத (பாகத) மொழியிலும் இருந்தன.
அந்நூல்களில் பொதிந்து கிடந்த சமண சமயக் கருத்துக்களைத் தமிழ்
மக்களிடம் பரப்ப, சமணத் துறவிகள் முயன்றனர். ஆனால், அவர்கள்
முயற்சிக்கு மொழி தடையாக இருந்தது. ஆதலின், தமிழ் மொழியை
அவர்கள் கற்றுத் தேர்ச்சி பெறவேண்டியதாயிற்று. தொடக்கத்தில்
வடமொழியில் இருந்த சமண சமயக்கருத்துகளைத் தமிழில் எடுத்துக் கூறப்
பெருமுயற்சி செய்தனர். உயர்ந்த கருத்துக்களை எல்லோருக்கும்
விளங்கும்வகையில் தமிழில் கொண்டுவர அவர்களால் எளிதில் இயலவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் தமக்குத் தெரிந்த வடமொழியையும் தமிழையும்
கலந்து (மொழி பெயர்ப்பு வேலையில் ஈடுபடாமல்) ஒருவகையான புதிய
நடையைத் தோற்றுவித்தனர். இந்த நடையே மணிப்பிரவாள நடை என்று
பெயர் பெற்றது.