கிரந்த எழுத்துக்கள் மணிப்பிரவாள நடையில், வாக்கியங்களின் அமைப்பு தமிழ் இலக்கணத்தைத் தழுவியே அமைந்துள்ளது. தமிழ் இலக்கணங்களைப் போற்றியே வந்தது. ஆனால், தமிழ் மொழியுடன் இதற்குமுன் கண்டிராத அளவுக்கு வடமொழிச் சொற்களையும் தொடர்களையும் கொண்டுவந்து கலந்து விட்டது. வடமொழிச் சொற்களைத் தமிழ் மொழியின் ஒலி முறைக்கு ஏற்றவாறு அமைத்து வழங்க வேண்டும் என்ற தொல்காப்பியரின் ஆணையை மறந்து விட்டு, வடசொற்களை எவ்வித மாற்றமும் செய்யாமல் வடமொழி ஒலிமுறைப்படியே எழுத முற்பட்டனர். இதன் விளைவாய்த் தமிழ்மொழியில் இல்லாத ஒலிகளுக்கு வரி வடிவம் காணும் தேவை எற்பட்டது. வடமொழிச் சொற்களை அவற்றிற்குரிய ஒலியின்படி வழங்கும் முயற்சி கிரந்த எழுத்துக்களைத் தமிழில் தோற்றுவித்தது. ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ ஆகிய வடமொழி எழுத்தொலிகள் கிரந்த வடிவில் எழுதிச் சேர்க்கப்பட்டன. வடசொற்களையும் தொடர்களையும் கிரந்த எழுத்திலும், தமிழ் மொழியைத் தமிழ் எழுத்திலும் எழுதலாயினர். மணிப்பிரவாள நடை இவ்வாறு ஒலியிலும், வரி வடிவிலும், சொற்களிலும் கலப்பு அடைந்து, தனிஇயல்புடன் உருவாயிற்று. சமணர்கள் மணிப்பிரவாள நடையில் எழுதிய நூல்கள் சில உள்ளன. ஸ்ரீ புராணம், கத்திய சிந்தாமணி ஆகிய இரண்டும் மணிப்பிரவாள நடையில் அமைந்த சமண நூல்களாகும். மணிப்பிரவாள நடையில் உரைநடை மட்டுமன்றி, செய்யுள்களும் தோன்றின. யாப்பருங்கல விருத்தியுரை மணிப்பிரவாள நடையில் தோன்றிய நூல்களை, “இனிப் பாவினங்களுள் சமக்கிரதமும் வேற்றுப் பாடையும் விரவி வந்தால் அவற்றையும் அலகிட்டுப் பாச்சார்த்தி வழங்கப்படும். அவை குறு வேட்டுவச் செய்யுளும் லோக விலாசனியும் பெருவள நல்லூர்ப் பாசாண்டமும் முதலாக உடையன எனக்கொள்க” என்று கூறுகின்றது.1 இலக்கணம் மணிப்பிரவாள நடை வளர்ந்து பெருகி, நூல்கள் சில அந் நடையில் தோன்றியதால் வீரசோழியம் அந்த நடைக்கு இலக்கணம் வகுத்தது: இடையே வடஎழுத்து எய்தில் விரவியல் ஈண்டெதுகை 1. யாப்பருங்கல விருத்தி (ஒழிபியல்) பக்கம் 491, பவானந்தம் பிள்ளை பதிப்பு. |