பக்கம் எண் :

485ஆய்வு

    நடை ஏதும் இல்லா மணிப்ர
         வாளநற் றெய்வச்சொல்லின்
    இடையே முடியும் பதமுடைத்
         தாம்கிள விக்கவியின்
    தொடையே துறைநற் பிரளிகை
         யாதி துணிந்தறியே

                                          (அலங். 2)

என்பது அந்நூல் கூறும் இலக்கணம்.

     மலையாள மொழியில் ‘லீலா திலகம்’ என்ற நூல், மணிப்பிரவாள
நடைக்கு இலக்கணம் கூறுகின்றது. அந்நூல் மணி என்பதற்கு மாணிக்கம்
என்று பொருள் கொண்டு, “சிவந்த மாணிக்க மணியும் செம்பவளமும்
கலந்து கோத்த மாலையில் இரண்டு செந்நிறமும் வேறுபாடு தோன்றாதவாறு
ஒன்றாகக் காட்சியளிப்பதுபோல, இருமொழிச் சொற்களும் கலந்து அமையும்
நடை” என்று விளக்குகின்றது.

வைணவ உலகில் - மணிப்பிரவாளம்

    பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு வைணவ உலகில் பல
மாறுதல்கள் ஏற்பட்டன. ஆழ்வார்களின் பக்திப் பாடல்களுக்குத் தத்துவப்
பொருள் கூறும் நோக்கம் பெரியவர்களிடம் உண்டாயிற்று. வடமொழியிலுள்ள
வேத ஆகம புராணங்களின் கருத்துக்களைக் கொண்டு வந்து, ஆழ்வார்களின்
பாடல்களுக்கு விளக்கமாய் அமைத்துக் காட்டினர். தமிழ், வடமொழி ஆகிய
இருமொழிகளையும் ஒப்பு நோக்கிச் சிறப்புச் செய்தனர். வடமொழிச்
சுலோகங்களை, ஆழ்வார்களின் பாடல்களுக்கு விளக்கம்
கூறப்பயன்படுத்தினர். வடமொழியே சமயக் கருத்துக்களை விளக்கும் மொழி
என்ற நிலைமையை மாற்ற முயன்றனர். அதனால், அவ்விரு மொழிகளையும்
ஒன்றாக இணைத்துச் செல்லும் மணிப்பிரவாள நடையை மேற்கொண்டனர்.
சமணர்கள் தம் சமயக் கருத்தை விளக்க மேற்கொண்ட மணிப்பிரவாளம்
வைணவ உலகில் புகுந்தது; புகுந்து வளம்பெற்றுச் சிறப்புடன் வளர்ந்தது;
வளர்ந்து செழித்தது.

     வைணவ உரையாசிரியர்கள், வடமொழியிலிருந்த சமயக் கருத்துக்களைக்
கற்றுத்தேர்ந்தவர்கள்; ஆழ்வார்கள் பாடலில் ஊறித் திளைத்தவர்கள்.
அறிவையும் உணர்ச்சியும் இணைத்து வைணவ சமயத்தை வளர்க்க அவர்கள்
முயன்றனர். அவர்களைத் ‘தென்சொற் கடந்து வடசொற்கு எல்லை கண்ட
சான்றோர்கள்’ என்னலாம்.