பக்கம் எண் :

உரையாசிரியர்கள்486

எதிர்ப்பும் தோல்வியும்

    சமணர்கள் தோற்றுவித்த மணிப்பிரவாளநடை வளர்ந்து, வைணவஉலகில்
நுழைந்து செல்வாக்குப் பெற்றது. ஆனால், தொடக்கத்தில் மணிப்பிரவாள
நடைக்கு எதிரப்பு இருந்தது. சமண சமயத்தை எதிர்த்து நின்ற திருஞான
சம்பந்தர் சமணர்கள் கையாண்ட மணிப்பிரவாள நடையையும் எதிர்த்துள்ளார்
என்பதற்கு, அவரது பாடல்களில் சான்று உண்டு. மணிப்பிரவாள நடையில்
எழுதுவது, ‘ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயன் அறிகிலாது உருச் சிதைந்து
உரைப்பது’ என்று அவர் இகழ்கின்றார். இவ்வாறு எதிர்த்தும் மணிப்பிரவாள
நடை வளர்ந்து வந்து, வைணவ உலகில் சிறப்புப் பெற்றது.

     மணிப்பிரவாள நடையை, சமணர்கள் வளர்த்த காரணத்தினால் மட்டும்
திருஞான சம்பந்தர் எதிர்த்தார் என்று கருதுவது பொருந்தாது. அந்நடை,
தமிழ் மரபிற்கு ஒவ்வாமல் இருந்ததாலும், இரு மொழியில் வல்லவர்களால்
மட்டுமே அறிந்து கொள்ளக் கூடியதாய் இருந்ததாலும் அதை எதிர்த்தார்.

     தமிழுடன் மிகுதியான வட சொற்கள் கலந்த நடையே மணிப்பிரவாள
நடை என்று நினைப்பது தவறு. வடமொழி இலக்கணப்படி அமைந்த
கூட்டுச் சொற்கள், கூட்டு ஒலிகள், நீளமான தொடர்கள் யாவும் அப்படியே
எடுத்தாளப் பெறும். அவற்றைப் படித்து அறிய வட சொற்களின் பொருள்
மட்டும் அறிவது போதாது. வடமொழிக்கு உரிய இலக்கணத்தையும் அறிய
வேண்டும். ஆதலின், இரு மொழிப் புலவர்கள் மட்டுமே மணிப்பிரவாள
நடையில் அமைந்த நூல்களைக் கற்க முடியும்.

     வைணவ சமயத்தில் மணிப்பிரவாள நடைக்குச் செல்வாக்கு
ஏற்பட்டபின், அந்நடையில் அரிய பெரிய சமயக் கருத்துக்களை இருமொழி
வல்ல சான்றோர்கள் எழுதி வைத்தனர்.

     காலப்போக்கில் மணிப்பிரவாள நடை வழக்கிழந்தது. அந்நடையை
எழுதுவோரும் படிப்போரும் அருகினர். ஏதேனும் ஒரு மொழியில் புலமை
பெற்றவர்கள். அந்நடையில் அமைந்த நூலைப் புறக்கணித்தார்கள்.
பயில்வாரின்றி அவை ஒதுங்கிக் கிடக்கவே பொதுமக்களிடம் அவற்றைப்
பரப்புவோர் இன்மையால் தேங்கி நின்றன. அறிவுச் செல்வமாய்- சமயக்
கருத்துக்களின் கடலாய் - ஆராய்ச்சிக் களஞ்சியமாய் விளங்கும் உரைகள்,
கற்போர் இன்மையால் போற்றுவாரின்றிப் போனது வருந்துதற்கு உரியதாகும்.
உரை விளக்கம் கண்ட பெரியார்களின் நோக்கம், காலப்போக்கில்
நிறைவேறாமல் போனதை எண்ணும் போது துன்பம் மிகுகின்றது.