பக்கம் எண் :

487ஆய்வு

     மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ள வைணவ உரைகளில் உள்ள
வடமொழிப் பகுதிகளைத் தமிழாக்கி வைணவச் சான்றோர் பி.ஆர்.
புருஷோத்தம நாயுடு வெளியிட்டுள்ளார்.

உரைகண்ட சான்றோர்கள்

     மணிப்பிரவாள நடையில் வைணவ சமயத்திற்கு அமைந்த உரைநடை
நூல்களை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று: ஆழ்வார்களின்
பாடல்களுக்கு அமைந்த வியாக்கியானங்கள். மற்றொன்று; ஆழ்வார்களின்
வரலாற்றையும் அவர்களுக்குப்பின் தோன்றிய வைணவப் பெரியோர்களைப்
பற்றிய வரலாற்றையும் கூறுகின்ற ‘குருபரம்பரா ப்ரபாவம்’ என்று வழங்கும்
வரலாற்று நூல்கள்.

     இனி, வியாக்கியானங்கள் தோன்றிய வரலாற்றையும் அவற்றை இயற்றிய
உரையாசிரியர்கள் வரலாற்றையும் காண்போம்.

நாதமுனியின் வழித்தோன்றல்

    வீர நாராயணபுரத்தில் வாழ்ந்த நாதமுனியின் மைந்தர் ஈசுவரமுனி.
ஈசுவர முனியின் மைந்தர் ஆளவந்தார். ஆளவந்தாருக்கு யமுனைத் துறைவர்
என்ற பெயரும் உண்டு. ஆளவந்தார் வைணவ ஆசாரியர்களில் சிறப்புடன்
விளங்கினார். இவருக்குச் சீடர் பலர் தோன்றினர். பெரியநம்பி
திருக்கோட்டியூர் நம்பி பெரிய திருமலை நம்பி திருமலையாண்டான்
மாறனேரி நம்பி திருக்கச்சி நம்பி முதலிய 16 பேர் சீடர்கள் இருந்தனர்.

     இவர்களுள், பெரிய திருமலை நம்பி திருவேங்கடத்தில் வாழ்ந்து
வந்தார். இவரது தங்கை, பூமி பிராட்டியார் (காந்திமதி என்ற பெயரும்
உண்டு). இந்த அம்மையார், திருப்பெரும்புதூரில் ஆசூரி கேசவப் பெருமாள்
(கேசவ சோமாஜி என்றும் கூறுவர்) என்பாரை மணந்து கொண்டு இல்லறம்
நடத்தி வந்தார்.

     இவர்கள் செய்த நற்றவப் பயனாய், 1017 ஆம் ஆண்டு (பிங்கள
ஆண்டு, சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில்) ஓர் ஆண் மகவு
பிறந்தது.

     தம் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டு, திருமலை
நம்பி திருப்பெரும்புதூர்க்கு வந்து குழந்தையைக் கண்டு மகிழ்ந்தார்.
குழந்தையின் பேரழகில் ஈடுபட்டு அதற்கு இலட்சுமணன் (இளைய ஆழ்வான்)
என்று பெயரிட்டார்.

     இலட்சுமணரே பிற்காலத்தி்ல் (32 ஆவது வயதில் துறவு பூண்டு)
இராமானுசர் என்ற பெயருடன் வைணவ உலகின் ஞாயிறாகத் திகழ்ந்தார்.