வைணவ ஞாயிறு ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் சமயத் துறையில் இருள் பரவிக் கிடந்தது. ஆழ்வார்களின் பிரபந்தமும் மூவர் தேவாரமும் வெளிப்பட்ட போதிலும் அவை பொருள் விளக்கத்தோடு மக்கள் நடுவே பரவவில்லை. கற்றவர்களிடம் வடமொழி வேதங்கள் உபநிடதம் பகவத்கீதை ஆகியவை பரவி, வடமொழி செல்வாக்குப் பெற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் இராமானுசர் தோன்றினார். ஆழ்வார்களின் பிரபந்தங்களை ஆழ்ந்து பயின்று தெளிந்தார், வடமொழியிலும் தேர்ச்சி பெற்றார். இரு மொழியிலும் புலமை பெற்றபின் சமயப்பணியாற்றத் தொடங்கினார். இராமானுசர் பிறந்தது திருப்பெரும்புதூரில்; கல்வி கற்றது காஞ்சிபுரத்தில்; சமயத்தொண்டு புரிந்தது திருவரங்கத்தில். இவர் பன்னிரண்டு ஆண்டுகள் மைசூர் நாட்டில் தங்கி இருந்து வைணவத்தை வளர்த்தார். இராமேசுவரம் முதல் காஷ்மீரம் வரை இந்தியா முழுதும் முக்கோல் ஏந்தி யாத்திரை செய்து, பக்திநெறி பரப்பி வெற்றிக்கொடி நாட்டினார். இதனால் இவரை, வையம் குருடன்றோ மாமறையும் பொய்யன்றோ ஐயன் உரைத்ததமிழ் ஆர்அறிவார் - வையத்துக்கு ஊன்றுகோல் எந்தை எதிராசர் ஆதரித்த மூன்றுகோல் காண்பதற்கு முன் என்று வைணவ உலகம் போற்றுகின்றது. இராமானுசர், ஆதிசங்கரரிடமிருந்து வேறுபட்டு விசிஷ்டாத்துவைத தத்துவத்தை ஒரு தனிப்பெருங் கொள்கையாக்கி வைணவ சமயத்திற்கு உறுதுணையாக்கினார். தென்னகத்து மக்களின் தொன்றுதொட்டு வருகின்ற வழிபாட்டு முறை, மரபுநிலை பிறழாத சமயச்சடங்கு, மாறாத பக்தி உணர்ச்சி ஆகியவற்றை வைணவத்துடன் இணைத்தார். இதனால், வைணவ சமயமும் தத்துவமும் புதிய எழுச்சி பெற்றன. இவர் வைணவ ஆசாரிய பரம்பரைக்குத் தலைமை தாங்கினார்: எம்பெருமானார் யதிராசர் ஸ்ரீ பாஷ்யகாரர் உடையவர் திருப்பாவை சீயர் முதலிய சிறப்புப் பெயர்களைப் பெற்றார். நம்மாழ்வார்க்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுகின்றார். இவரை வைணவர்கள், வான்திகழும் சோலை மதில்அரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமா நுசன். என்று போற்றுகின்றனர். |